“கஷ்டப்படும் போதும், திரைத் துரையில் புகழ் பெற்ற பிறகும் தனது தம்பிகளைக் கைவிடாதவர் தேவா” என தனது நண்பரும் இசையமைப்பாளருமான தேவா குறித்து நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் தேவா இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலர் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். தேவா குறித்த நினைவுகளைப் பகிர்ந்து நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “எனது அருமை நண்பர் இசையமைப்பாளர் தேவாவின் திடீர் மறைவு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
அவர் என்னுடைய ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’, ‘அருணாச்சலம்’ என மூன்று படங்களுக்கு இசையமைத்துள்ளார். மூன்றும் மிகப் பெரிய வெற்றிப் படங்கள்.
பிறகு ‘படையப்பா’ எடுக்கும்போது நண்பர்கள் சிலர் ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைக்க வைக்கலாம் என வற்புறுத்தியபோது நான் அரைமனதுடன் தேவாவிடம் சென்று ‘படையப்பா’ படத்துக்கு நான் ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைக்க வைக்கலாம் என நினைப்பதாக சொன்ன போது, எழுந்து நின்று என் கரங்களைப் பற்றிக் கொண்டு, ‘தாராளமா பண்ணுங்க’ எனச் சொன்னார்.
உடனே நான், ‘நீங்க தப்பா நினைக்கக் கூடாது’ என்றதும், அவர் சந்தோஷமாக சொன்னது, ‘நல்ல பையன். புதுசா நல்லா வந்துட்டு இருக்கிறார், சந்தோஷமா பண்ணுங்க. ரொம்ப சந்தோஷம். அந்த 3 படம் உங்களோட பண்ணுனதே பெரிய பாக்கியம்’னு சொன்னார். இப்படி கள்ளம் கபடம், பொய் வஞ்சகம் இல்லாத சொக்கத் தங்கம் தேவா.
வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டவர் தேவா. ஐந்து அண்ணன் தம்பிகளில் மூத்தவர். தெருத்தெருவாக, திருமணங்களில் எல்லாம் கச்சேரி பண்ணி குடும்பத்தைக் காப்பாற்றினார். திரையுலகில் பெரிய இசை அமைப்பாளராக மாறிய பிறகும் தன் தம்பிகளை விட்டுத்தராமல் கூடவே வைத்திருந்தார். அப்படி ஒரு அருமையான குடும்பஸ்தர், நல்ல மனிதர்.
இளையராஜா கொடிகட்டி இருந்த காலத்தில், தேவா தனக்கென ஒரு பாணியை உருவாக்கி மிகப் பெரிய வெற்றி அடைந்தவர்.
இரண்டரை வருடங்களுக்கு முன்னால், என்னிடம் வந்து ‘எல்லாரும் கச்சேரி பண்ணுறாங்க. நானும் பண்ணலாம்னு இருக்கேன். நேரு விளையாட்டு அரங்கத்துல, நீங்கதான் வந்து தொடங்கி வைக்கணும்’ அப்படினு கேட்டார். நான் சந்தோஷமா போய் அதுல கலந்துக்கிட்டேன்.
அதற்குப் பிறகு வெளிநாடுகளில் எல்லாம் அவர் கச்சேரி பண்ணினார். அவை எல்லாம் மிகப் பெரிய வெற்றியடைந்தன. ஒவ்வொரு வெளிநாட்டு சுற்றுப் பயணத்தையும் முடித்துவிட்டு என்னை வந்து தேவா சந்திப்பார்.
இப்போது சமீபத்தில் கனடா ஆஸ்திரேலியா போய் வந்து என்னை சந்தித்தார். அப்போது ‘ரொம்ப சந்தோஷமா இருக்கு... ஆச்சரியமா இருக்கு... இளைஞர்கள் அந்த அளவுக்கு வரவேற்கிறாங்க. இந்த சந்தோஷத்துடன் பத்து பதினஞ்சு வருஷம் சந்தோஷம் வாழ்ந்துருவேன்’னு என்னிடம் சொன்னார்.
நீங்க ரொம்ப நல்லவங்க சார். சந்தோஷமாக இருக்கும் போதே உங்களை தன்னிடம் அழைத்துக்கொண்டார். அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்’ என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இன்று ரஜினி படங்களில் அவர் பெயர் திரையில் வரும்போது ஒலிக்கும் ஜேம்ஸ்பாண்ட் பாணியிலான இசை தேவா உருவாக்கியது என்பதும், பாட்ஷா படத்தின் வெற்றிகளில் தேவாவின் இசை முக்கிய பங்காற்றியது என்பதும் இங்கே நினைவுகூரத்தக்கது.