ரஜினிகாந்த் தனது சுயசரிதையை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அவரது மகளும் தயாரிப்பாளருமான சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தை முடித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படத்தை அடுத்து ‘தர்மன்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் சிம்ரன், ராஷி கன்னா உள்பட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்த் தனது சுயசரிதையை எழுதி வருவதாக அவர் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், “அப்பா தனது சுயசரிதையை எழுதி வருகிறார். அந்தப் பணியில் நானும் நெருக்கமாக ஈடுபட்டுள்ளேன். அந்தப் புத்தகம் வெளியாகும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். மக்கள் மீண்டும் மீண்டும் வாசிக்கக்கூடிய, உத்வேகம் பெறக்கூடிய அரிய படைப்புகளில் ஒன்றாக அந்த புத்தகம் இருக்கும் என்று நம்புகிறேன்.
பரமஹம்ச யோகானந்தரின் ‘ஆட்டோபயோகிராபி ஆஃப் எ யோகி’ புத்தகத்தைப் போன்ற முக்கியத்துவத்தை அப்பாவின் சுயசரிதையும் பெறும் என்று நம்புகிறேன். ஏனென்றால் அவரது வாழ்க்கைப் பயணம் உண்மையிலேயே மிகவும் தனித்துவமானது. சரியான நேரம் வரும்போது, அவரது வாழ்க்கைக் கதை திரைப்படமாக உருவாக்கப்பட்டால், தனிப்பட்ட முறையிலும் தொழில்ரீதியாகவும் நான் மேற்கொள்ளக்கூடிய சிறப்பான படமாக அது இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
பேருந்து நடத்துநராக வாழ்க்கையைத் தொடங்கிய ரஜினிகாந்த், திரையுலகில் ஆரம்ப காலத்தில் சந்தித்த போராட்டங்கள், அவரது வளர்ச்சி, முக்கியமான திரைப்படங்கள் உள்ளிட்ட திரையுலக அனுபவங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் அவருக்கு இருந்த நெருக்கம் உள்பட பல்வேறு விஷயங்கள் அவரது சுயசரிதையில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.