சென்னை: “தயாரிப்பாளர் சரவணன் ஒரு ஜெண்டில்மேன். சினிமாவை உயிராக நேசித்தவர். என் கஷ்ட காலங்களில் எனக்குத் துணையாக இருந்தவர்” என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் இன்று (டிச.4) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86. வயது மூப்பு காரணமாக அவர் காலமானதாக தகவல் கிடைத்துள்ளது. அவரின் மறைவையொட்டி, முதல்வர் ஸ்டாலின், வைகோ மற்றும் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, ரஜினி காந்த், விஷால் உள்ளிட்டோர் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்னர் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ தயாரிப்பாளர் சரவணன் மிகப் பெரிய மனிதர். ஒரு ஜெண்டில்மேன். சினிமாவை உயிராக நேசித்தவர். என் கஷ்ட காலங்களில் எனக்குத் துணையாக இருந்தவர். உடையிலும் உள்ளத்திலும் வெண்மையானவர். என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். என் நலன்விரும்பி.
நான் ஏவிஎம் தயாரிப்பில் 9 திரைப்படங்களில் நடித்துள்ளேன். அனைத்தும் மிகப்பெரிய் ஹிட். அதில், சிவாஜி பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது. இன்னொரு திரைப்படத்தை எடுக்கத் திட்டமிட்டோம். ஆனால், அதற்குள் இப்படியாகிவிட்டது. அவரது மறைவு என் மனதைப் பாதிக்கிறது. அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.