ராகவா லாரன்ஸ் அடுத்ததாக ‘மஹாவீர் கர்ணா’ என்ற படத்தில் நடக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இது குறித்த தகவலை இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘நமது புராணத்தில் சிறந்த மற்றும் புகழ் பெற்ற கர்ணனின் கதாபாத்திரத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். ஆசீர்வாதமாகவும் உணர்கிறேன்.
இந்தத் திரைக்கதை என்னிடம் வரும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. இதை சாத்தியமாக்கி இப்படத்தை எனக்கு அளித்த இயக்குநர் ரமேஷ் வர்மாவுக்கு என் நன்றிகள். நன்றியுடனும் பணிவுடனும் இந்தப் பயணத்தை தொடங்குகிறேன். உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் எனக்கு வேண்டும்’ எனத் தெரிவித்து படத்தின் முதல் தோற்றப் போஸ்டரையும் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் ரமேஷ் வர்மா தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், ‘ஒரு முகம். ஓர் ஆளுமை, ஒரு வீரன். மஹாவீர் கர்ணாவாக ராகவா லாரன்ஸ். புகழ் மிக்க கர்ணனாக புராண படமொன்றில் அடியெடுத்து வைக்கிறார் ராகவா லாரன்ஸ்’ என்று தெரிவித்துள்ளார்.
‘மஹாவீர் கர்ணா’ படத்தை பென் மூவீஸ், ஸ்ரீநீலத்ரி புரொக்ஷன்ஸ் மற்றும் ஆர்வி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. ரமேஷ் வர்மா இயக்கும் படத்துக்கு ராம்ஜி டாட் ஒளிப்பதிவு செய்கிறார் ஞானி இசையமைக்கிறார். ஸ்ரீமணி வசனம் எழுதியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் இந்தப் படம் 2027-ம் ஆண்டில் திரைக்கு வர இருக்கிறது.