தமிழ் சினிமா

சொந்த மாவட்டத்தில் பாரதிராஜா உடலுக்கு ரசிகர்கள் அஞ்சலி: அரசு மரியாதையுடன் இன்று மாலை நல்லடக்கம்

என்.கணேஷ்ராஜ்

பெரியகுளம்: பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி மாவட்டம் காட்ரோடில் உள்ள அவரது பண்ணை வீட்டுக்கு இன்று (வியாழன்) காலை கொண்டு வரப்பட்டது. ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இவரது உடல் அரசு மரியாதையுடன் பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

உடல்நலக்குறைவால் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் பாரதிராஜா நேற்று அதிகாலையில் காலமானார். இவரது சொந்த ஊர் தேனி அல்லிநகரம் ஆகும். எந்த பின்னணியும் இல்லாமல் கிராமத்தில் இருந்து சினிமாவில் உச்சம் தொட்டவர் இவர். மண்மணம் வீசும் திரைப்படங்களை அதிகம் எடுத்ததுடன் தேனி மாவட்டத்துக்கு அடிக்கடி வந்து பொதுமக்களுடன் இயல்பாக பழகுவார். இதனால் சொந்த ஊர் மக்கள் இவர் மீது அலாதி பிரியம் கொண்டிருந்தனர்.

திரைத்துறையில் இவரின் வெற்றி பலருக்கும் சினிமா கனவை விதைத்தது. நீண்ட நெடுங்காலம் திரைத்துறையில் கோலோச்சிய இவரின் மரணம் தேனி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பாரதிராஜா சென்னையில் செட்டிலாகி இருந்தாலும் தன் சொந்த மண் மீது தனிப்பாசம் கொண்டிருந்தார். இதனால் இறந்த பிறகு தன் உடலை இங்குதான் அடக்கம் செய்ய வேண்டும் என்று உறவினர்களிடம் அடிக்கடிகூறி வந்துள்ளார்.

இதன்படி நேற்று சென்னையில் பலரும் இவரதுஉடலுக்கு அஞ்சலி செலுத்திய நிலையில் இரவில் இவரது உடல் தேனி மாவட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெரியகுளம் வட்டம் காட்ரோடு அருகே உள்ள அவரது பண்ணையில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹப்ரியா தலைமையிலான போலீஸார் பண்ணை வீட்டை ஆய்வு செய்தனர். இப்பகுதி கொடைக்கானல் சாலையில் அமைந்திருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாதவண்ணம் வரும் வாகனங்களை நிறுத்துவது உள்ளிட்ட பணிகளை அவர் பார்வையிட்டார்.

இந்நிலையில் சென்னையில் இருந்து  பிரத்தேயக வாகனத்தில் வந்த இவரது உடலுக்கு வழிநெடுகிலும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். பாரதிராஜாவின் உடல் இன்று காலை 7 மணிக்கு அடக்கம் செய்யப்பட உள்ள இடத்துக்கு வந்து சேர்ந்தது.

இதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மேடையில் அவரது உடல் ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான ரசிகர்களும், பிரமுகர்களும், உள்ளூர் மக்களும் அதிகளவில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பின்பு மாலை 3 மணிக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

SCROLL FOR NEXT