கே.ராஜன்
பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது.
பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் இன்று (மே 17) மாலை கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கே.ராஜனின் திடீர் தற்கொலை முடிவு, தமிழ் திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியினை உருவாக்கியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற பல்வேறு திரைப்பட விழாக்களில், எந்தவொரு சமரசமும் இல்லாமல் பல்வேறு பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்தவர் கே.ராஜன். இதனாலேயே திரைப்பட விழாக்களில் இவரை சிறப்பு விருந்தினராக அழைப்பு விடுப்பார்கள். இவர் தயாரிப்பாளர், கதாசிரியர், இயக்குநர், நடிகர் என பன்முகத் திறமை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘பிரம்மச்சாரிகள்’, ‘டபுள்ஸ்‘, ‘அவள் பாவம்’, ‘நினைக்காத நாளில்லை’ ஆகிய படங்களை தயாரித்தவர் கே.ராஜன். ‘நம்ம ஊரு மாரியம்மா’ மற்றும் ‘உணர்ச்சிகள்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். ’தங்கமான தங்கச்சி’ மற்றும் ’சின்ன பூவை கிள்ளாதே’ ஆகிய படங்களின் கதாசிரியராக பணிபுரிந்துள்ளார்.
மேலும் நடிகராக ’மைக்கேல் ராஜ்’ படம் தொடங்கி பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் கே.ராஜன். கடைசியாக இவருடைய நடிப்பில் ‘பகாசூரன்’ வெளியானது குறிப்பிடத்தக்கது.