‘செந்தமிழ்ப் பாட்டு’, ‘சின்ன மாப்ளே’, ‘மிஸ்டர் மெட்ராஸ்’ ஆகிய படங்களில் பிரபு, சுகன்யா ஜோடியாக நடித்திருந்தனர். இந்தப்படங்களுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்துள்ளப் படம், ‘மேரி கோல்டு’.
இதில் இவர்கள் 31 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும்சேர்ந்து நடிக்கின்றனர். மேலும் ரக் ஷன், நம்ரிதா, சிங்கம்புலி, வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி, விவேக் பிரசன்னா உள்பட பலர் நடிக்கின்றனர்.
மல்லிகார்ஜுன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்குச் சித்து குமார் இசையமைக்கிறார். டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் மூலம் ஆர்.ரவீந்திரன் தயாரிக்கிறார்.
சுதர்சன் இணை தயாரிப்பு செய்யும் இப்படத்தைப் பிரியன் ராஜேந்திரன் இயக்குகிறார். இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.
“திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி நகரங்களைச் சேர்ந்த கதை மாந்தர்களுக்கு இடையே நடைபெறும் சுவாரஸ்யமான போட்டியையும் அலாதியான வாழ்வியலையும் மையமாகக் கொண்டு உணர்வுப்பூர்வமான குடும்பக் கதையாக இப்படம் உருவாகிறது” என்று படக்குழு தெரிவித்துள்ளது.