ஒளிப்பதிவுக்கான லென்ஸ் தேர்வே, ஒரு காட்சியின் மறைமொழியாக இருக்கிறது. சினிமா என்பது காட்சிகளின் தொடர்ச்சி, அது உணர்வுகளின் தீவிரமான பயணம்.
இந்தப் பயணத்தில் காட்சியின் ஒவ்வொரு தருணத்தையும் மனநிலையையும், தொனியையும், பார்வையாளர் எந்த உணர்வுடன் பார்க்க வேண்டும் என்பதையும் தீர்மானிப்பவை கேமரா லென்ஸ்கள். ஒவ்வொரு லென்ஸும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய மொழியைப் பேசுகிறது. அது காட்சியின் ஆழத்தையும், பரப்பையும், அளவையும் வடிவமைக்கும் மந்திரம்.
லென்ஸ்களின் வகைகள்: அழகியலும் உணர்ச்சியும் - ஸ்பெரிக்கல் லென்ஸ்கள் இயல்பான பார்வையை பிரதிபலிக்கும் திறன் கொண்டதால், இவற்றை அடிப்படைக் கருவி எனக் கொள்ளலாம்.
குறைந்த விலகல் (டிஸ்டார்ஷன்), இயற்கையான கோணப் பார்வை (பெர்ஸ்பெக்டிவ்), பல்வேறு ஆஸ்பெக்ட் ரேஷியோக்களில் படமாக்கும் வாய்ப்பு (16:9, 1:1.37, 1:1.85), ட்ராமா, ரொமான்ஸ் மற்றும் ரியலிஸ்டிக் படங்களுக்கு ஏற்றவை இவ்வகை லென்ஸ்கள். பார்வையாளரை கதை நடக்கும் இடத்தில் இருப்பதுபோல உணர்த்தும் வலிமை இவற்றுக்கு உண்டு.
கண்ணன், க்வின்டின் டாரன்டினோ, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்
அனமார்ஃபிக் லென்ஸ்கள்: இவ்வகை லென்ஸ்கள் சினிமாஸ்கோப்பின் அடையாளம். சினிமாட்டிக் காட்சிகளுக்கு ஏற்றவை. அகலமான 2.39:1 சட்டகம், கவித்துவமான பிரம்மாண்டம், கிடைமட்ட ஒளிக்கீற்றுகள் (ஹரிஜாண்டல் ஃப்ளேர்), ஓவல் போஃகே. ஒரு காட்சியை முன்னெப்போதும் இல்லாத விஸ்தீரணத்துடன் அணுகுவதோடு, ஆக் ஷன், காவியம், வரலாறு, அறிவியல் புனைவு போன்ற படங்களுக்கு ஏற்றவை.
ப்ரைம் லென்ஸ்கள்: இவை நிலையான குவியத்தூரம் (ஃபிக்ஸ்ட் ஃபோகல் லென்த்) கொண்டவை. அதிக ஒளி உட்கொள்ளல் (குறைந்த டி-ஸ்டாப் எண்) மற்றும் துல்லியமான தெளிவு இவற்றின் சிறப்புகள். ப்ரைம் லென்ஸ்கள் எடை குறைவானதாக உள்ளதால் ஹேண்ட் ஹெல்ட் காட்சிகளை எடுப்பது மிகவும் எளிது.
ஜூம் லென்ஸ்கள்: ஒரே லென்ஸில் பல குவியத் தூரங்கள் (வேரியபிள் ஃபோகல் லென்த் ஆப்ஷன்ஸ்) கொண்டதால் காம்போசிஷனுக்கான சுதந்திரம் மிகவும் அதிகம்.
ஜூம் லென்ஸில் ஆப்டிகல் நகரும் பாகங்கள் உள்ளதால், அதன் மூலம் நகர்வுகளை உருவாக்கலாம். இதை ஆப்டிகல் கம்ப்ரஷன் என்றும் கூறலாம். மெதுவான ஜூம் இயக்கங்கள் ஒரு ட்ராலி நகர்வைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
சில லொகேஷன்களில் கேமராவை ட்ராலி மூலம் இயக்குவது சாத்தியமற்ற நிலையில், ஜூம் லென்ஸுகளில் உள்ள ஃபோகல் லென்த் அளவை மாற்றி
யமைத்து ஆப்டிகல் நகர்வை செய்யும் வாய்ப்பும் உள்ளது. ஜூம் ரிங்கை இயக்கும் போது ஜூம் இன் / ஜூம் அவுட் ஆவதால் அந்த காட்சியில் பதற்றம், எதிர்பார்ப்பு, உளவியல் கோணம் ஆகியவற்றை அதிரடியாக உருவாக்கலாம்.
டாலி நகர்வையும் ஜூம் இயக்கத்தையும் ஒரே நேரத்தில் எதிர்மறையாக இயக்கும்போது வெர்டிகோ எஃபெக்ட் உருவாகும். டாலி முன்னே செல்லும்போது, ஜூம் அவுட் செய்வதும், டாலி பின்னே செல்லும்போது ஜூம் இன் செய்வதுமே வெர்டிகோ எஃபெக்ட் எனப்படும்.
இதன் மூலம் ஃப்ரேமில் தோன்றும் கதாபாத்திரத்தின் பின்னணி விரிந்தோ அல்லது சுருங்கியோ ஒரு நாடகத்தனமான எஃபெக்ட்டை ஏற்படுத்திவிடும். குழப்பம், பயம், ஐயம், மோதல் ஆகிய உணர்சிகளையும் வெளிப்படுத்தலாம்.
லென்ஸ் தேர்வே கதைசொல்லல் மொழி: ஒரு காட்சியின் பார்வைப் பரப்பைத் தீர்மானிப்பதோடு அதற்கேற்றவாறு லென்ஸின் ‘ஃபோகல் லென்த்’தை நிர்ணயிப்பவர் அத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரே. எனினும், பல்வேறு இயக்குநர்கள் ஒளிப்பதிவாளரின் துணையுடன் தங்கள் விருப்பதிற்கேற்ப ஃப்ரேமின் அளவுகோலை நிர்ணயித்து காட்சிப்படுத்துவார்கள்.
மனிதக் கண்களுக்கு நெருக்கமான பார்வைப் பரப்பைக் கொண்டுள்ளதால் 50 எம்எம் லென்ஸ்களை இயக்குநர் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக், தனது திரைப்படங்களின் முக்கியமான காட்சிகளில் அதிகமாகப் பயன்படுத்தினார்.
இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் விருப்பமான ஃபோகல் லென்த் தேர்வு - 21 எம்எம் லென்ஸ். அவை அகலக்கோணம் கொண்டுள்ளதால் கதாபாத்திரத்தை அதன் பின்னணியோடு முழுமையாகக் காட்டும்.
அதோடு, அதிக அப்பர்சர் எண் மூலம் ஆழமான ஃபோகஸ் (டீப் ஃபோகஸ்) கிடைப்பதால் முன்புலம் (ஃபோர் க்ரவுண்ட்), பின்புலம் (பேக் க்ரவுண்ட்) இரண்டிலும் அதிக டெப்தை துல்லியமாகக் காட்டலாம்.
இயக்குநர் க்வின்டின் டாரன்டினோ – க்ராஷ் ஜூம் நுட்பம்: பல்ப் ஃபிக் ஷன், கில் பில் போன்ற திரைப்படங்களில், பார்வையாளரின் கவனத்தை ஒரு புள்ளியில் சட்டென்று நிறுத்தும் திடீர் உணர்வை ஏற்படுத்த இயக்குநர் க்வின்டின் டாரன்டினோ, க்ராஷ் ஜூம் நுட்பத்தை சிறப்பாகப் பயன்படுத்தினார். அதனால் க்ராஷ் ஜூம் நுட்பம், டாரன்டினோ ஸ்டைல் என்று அழைக்கப்பட்டது.
ஒளிப்பதிவாளர் கண்ணன் – தமிழ் சினிமாவின் ஜூம் கவிதை: எண்பதுகளின் தமிழ் சினிமாவில் இயக்குநர் பாரதிராஜாவுடன் இணைந்து பல்வேறு காட்சிகளில் ஜூமை பயன்படுத்தி கிராமப்புறக் காட்சிகளை கவிதையாக்கியவர். ஓர் அகன்ற பரப்பிலிருந்து காட்சியைத் தொடங்கி, அப்படியே கதாபாத்திரத்தின் க்ளோசப்பில் காட்சியை அவர் நிறைவு செய்யும் போது, பார்வையாளருக்கு ஒர் பயண உணர்வை ஏற்படுத்தியது.
ஜூமின் வேகத்தை மாற்றியமைப்பதில் நிபுணத்துவம் பெற்றவர் என்பதால் காட்சிகளின் தன்மையும் மாறியது. லென்ஸ் என்பது காட்சியின் உணர்ச்சி வெப்பநிலையை நிர்ணயிக்கும் ஒரு கருவி. சூழல், இடைவெளி, மற்றும் கதாபாத்திரங்களின் மனநிலை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு மவுன மொழி.
ஃபோகல் லென்த் : இடவெளி உணர்வை உருவாக்கும் கருவி: ஃபோகல் லென்த், சட்டகத்துக்குள் இருக்கும் இடத்தின் வடிவத்தை மாற்றுகிறது. வைட் லென்ஸ் இடத்தைப் பிரித்து, தூரத்தை மிகைப்படுத்திக் காட்டும். இதனால் ஓர் அகன்ற தன்மை உருவாவதோடு,ஒரு ஃப்ரேமிற்குள் பல்வேறு கூறுகளை கம்போஸ் செய்யலாம். கடலோரக் கவிதைகள் திரைப்படத்தில் பெரும்பாலான கடற்கரைக் காட்சிகள் வைட் லென்ஸ் கொண்டு படமாக்கப்பட்டவை.
டெலிஃபோட்டோ லென்ஸ்: பின்னணியை நெருங்கி வரச் செய்து, தூரத்தைக் குறைத்துச் சுருக்கிக் காட்டும். ராவணன் திரைப்படத்தில் அருவி பின்னணியில் அமைந்த ஃப்ரேம்களில் டெலிஃபோட்டோ லென்ஸ் மூலம் கதாபாத்திரங்கள் தனித்து நிற்பது போல காட்சிப்படுத்தப்பட்டன.
ஃபோகஸ் ஆழம் – காட்சியின் மூச்சு: ஃபோகஸ் ஆழம் என்பது காட்சியின் எந்தப் பகுதி கூர்மையாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்கிறது. ஆழமான ஃபோகஸ்(டீப் ஃபோகஸ்) - சூழலும் கதாபாத்திரமும் ஒரே நேரத்தில் தெளிவாக இருக்கும். அளவான/தேர்ந்தெடுத்த ஃபோகஸ் முக்கியமான உணர்வை மட்டும் தெளிவாக்கி, பின்னணியை மென்மையாக மங்கச் செய்யும்.
ஒளி உட்கொள்ளல் (அப்பர்சர்) - லென்ஸ் உள்வாங்கும் ஒளியின் அளவு, காட்சியின் ஒட்டுமொத்த ஆன்மாவை மாற்றுகிறது. ஒளிப்பதிவாளர் லென்ஸ் மூலம் காட்சியைப் பதிவு செய்யும்போது உணர்ச்சியையும் சேர்த்தே வடிவமைக்கிறார். இதனால் பார்வையாளரின் மனதில் அவர்கள் விரும்பும் உணர்வை ஆழமாகப் பதிய வைக்க முடிகிறது.
- cjrdop@gmail.com
(புதன் தோறும் ஒளிகாட்டுவோம்)
முந்தைய அத்தியாயம்: லொகேஷன் - காட்சியின் உள்ளார்ந்த இதயம் | ஒளி என்பது வெளிச்சமல்ல 07