சேகர் கேசவ் சிரின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், ‘பீட்சா பாய்ஸ்’. சிவம் சங்கர் நாயகனாக நடிக்கும் இதில் அல்ஃபியா, சரத் லோகிதஸ்வா, ஷோப்ராஜ், அருள், காக்காமுட்டை ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். செவன் ஹில்ஸ் சினி கிரியேஷன் சார்பில் சங்கர் கே.என்.மற்றும் சஹானா சங்கர் தயாரித்துள்ள இப்படத்துக்கு குரு பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம் பற்றி இயக்குநர் சேகர் கேசவ் சிரின் கூறும்போது, “நான் மகாராஷ்டிராவில் பிறந்து வளர்ந்தவன். எனது பெற்றோர் வீட்டில் தமிழில் தான் பேசுவார்கள். தமிழ் மொழி மீதான காதலால், இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன். பெங்களூருவில் தங்களுக்கான வாழ்க்கையை உருவாக்க முயற்சிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 5 இளைஞர்களும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும்தான் இப்படம்.
நட்பு மற்றும் லட்சியத்தை மையமாகக் கொண்ட திரைப்படமாக இது உருவாக்கப்பட்டிருந்தாலும், வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தைத் தேடி வேறு மாநிலங்களுக்குச் செல்லும் தமிழக மக்களின் சிரமங்களையும் இப்படம் பேசும். பெங்களூருவில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றபோது வானிலை சார்ந்த சில சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. இருப்பினும், மொத்த படக்குழுவினரும் ஒன்றிணைந்து செயல்பட்டோம்” என்றார்.