தனது பேச்சுக்கு த்ரிஷாவிடம் வருத்தம் தெரிவித்து, ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் பார்த்திபன்.
நேற்று த்ரிஷா மறைமுகமாக பார்த்திபனை கடுமையாக சாடியிருந்தார். அதுமட்டுமன்றி இணையத்திலும் பலர் பார்த்திபனை திட்டித் தீர்த்தார்கள். இதற்கு வருத்தம் தெரிவித்து பார்த்திபன் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், “சில நேரங்களில் சில தவறுகள் நோக்கமின்றி அரங்கேறி விடுகின்றன. தனியார் விருது வழங்கும் விழாவில் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதிலளித்து வந்தேன்.
அப்போது த்ரிஷாவின் புகைப்படமும் திரையில் வந்தது. அதற்கு என்ன சொல்வது என்று யோசிக்கையில் குந்தவை குந்தவை எனக் குரல்கள் எழுந்தது. உடனே ‘குந்தவையை வீட்டிலேயே குந்தவை’ என்று கூற அரங்கே கைதட்டியது. அந்த மேடையில் இருந்து கீழே இறங்கியவுடன் நண்பர் ஒருவர் அப்படிச் சொல்லியிருக்க வேண்டாம் என்று தெரிவித்தார்.
உடனடியாக தனியார் விருது நிறுவனத்திடம் அதனை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டேன். ஆனால், யாரோ எடுத்த வீடியோ வெளியாகி பலருடைய மனதையும் புண்படுத்தி இருக்கிறது. அதற்காக என் மனப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பிரச்சினைகள் பெரிதாவதை நான் விரும்புவதில்லை” என்று தெரிவித்துள்ளார் பார்த்திபன்.
முன்னதாக தனியார் ஊடகம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் தொகுப்பாளர்கள் திரையில் சில புகைப்படங்களைப் போட்டுக் காட்டி அதுகுறித்து கருத்து தெரிவிக்கச் சொல்லி கேட்டனர். அதில் நடிகை த்ரிஷாவின் படமும் இடம்பெற்றது.
அதுகுறித்து கருத்து தெரிவித்த பார்த்திபன், “இந்த குந்தவையை வெளியே விடாமல் வீட்டுக்கு உள்ளேயே கொஞ்ச நேரம் குந்த வைப்பது நல்லது. அது நிறைய பிரச்சினைகளை உண்டாக்காமல் இருப்பதற்காக சொல்கிறேன். சில கவிதைகளை ரசிக்கலாமே தவிர அந்த கவிதையை சொல்லாமல் இருப்பது சிறந்தது” என்று பேசியிருந்தார்.
இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பலரும் பார்த்திபனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக த்ரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் எதிர்வினையாற்றியுள்ளார். தனது பதிவில் அவர் கூறியிருப்பதாவது, “சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் என்னிடம் ஒரு தகவலைத் தெரிவித்தனர்.
ஒரு தனிநபரின் வேண்டுகோளின் பேரில், அவருடைய உதவியாளர் மூலமாகத் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில், கடைசி நேரத்தில் என்னுடைய பெயரும் புகைப்படமும் அந்த நிகழ்ச்சியில் சேர்க்கப்பட்டதாகக் கூறினர். கையில் மைக் இருப்பதால் மட்டும் ஒருவருடைய கருத்து அறிவார்ந்ததாகவோ அல்லது நகைச்சுவையானதாகவோ மாறிவிடாது.
அது முட்டாள்தனத்தை இன்னும் சத்தமாக வெளிப்படுத்த மட்டுமே உதவும். அறிவில்லாமல் பேசப்படும் அநாகரிகமான வார்த்தைகள், யாரைக் குறித்துப் பேசப்படுகிறதோ அவரை விட, பேசுபவரின் தரத்தைப் பற்றியே அதிகம் வெளிச்சம் போட்டுக் காட்டும்”என்று த்ரிஷா தெரிவித்துள்ளார்.