‘தலைவன் தலைவி’ படத்துக்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கியுள்ள படம் ‘பரிமளா அண்ட் கோ’. ஜெயராம், ஊர்வசி, சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சாண்டி உள்பட பலர் நடித்துள்ளனர். யோகிபாபு, மிஷ்கின், சிங்கம்புலி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
லைகா புரொட க் ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன், தமிழ்க்குமரன் புரொடக் ஷன்ஸ் மற்றும் பசங்க புரொடக் ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் படம் பற்றி நடிகை ஊர்வசி கூறியதாவது: சில நேரங்களில் மட்டுமே, ‘இந்த கதைதான் உண்மையான ஹீரோ’ என்று நம்பிக்கை தரும் படங்கள் அமையும். இந்த கதையை கேட்ட தருணத்திலேயே அந்த நம்பிக்கை வந்துவிட்டது. முழு திரைக்கதையையும் கேட்ட பிறகு, இன்னும் விரிவாகக் கேட்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.
பிறகு இந்தப் படத்தின் மீது இன்னும் அதிகமான மகிழ்ச்சியும் நம்பிக்கையும் வந்தது. அதிலும் ஜெயராம் நடிக்கிறார் என்றதும் மிகவும் மகிழ்ந்தேன். நாங்கள் 25 படங்களுக்கு மேல் சேர்ந்து நடித்துள்ளோம். ஆனால், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சேர்ந்து படம் செய்யவில்லை. இந்த கதை இருவருக்கும் ஒரே நேரத்தில் பிடித்தது. காரணம், இது உண்மையான வாழ்க்கை உணர்வுகளோடும், இயல்பான நகைச்சுவையோடும் சொல்லப்பட்ட கதை.
‘பசங்க’ படத்திலிருந்து பாண்டிராஜ் இயக்கிய படங்களைப் பார்த்திருக்கிறேன். ஒரு கதையை வடிவமைப்பதற்கு அவர் மிகவும் நேரம் எடுத்துக்கொள்வார். ஆனால் படப்பிடிப்பில் அவர் வேகம் வேற லெவல். மலையாள சினிமாவில் குறைந்த நாட்களில் தரமான படங்களை எடுப்பார்கள் என்று சொல்வார்கள். சமீபத்தில் நான் வேலை செய்த படங்களில் வேகமாக முடிக்கப்பட்ட படம் இதுதான். இவ்வாறு ஊர்வசி கூறினார்.