1952-ல் வெளியாகி தமிழ் சினிமாவின் திசையை மாற்றிய படம் ‘பராசக்தி’. இன்றும் கூட அதன் வசனங்கள், காட்சிகள் சமூக வலைதளங்களில் உயிர்ப்போடு பரவி வருவதை அறிவோம். இப்போது அதே பெயருடன் வெளியாகியிருக்கும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ பழைய படத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறதா என்று பார்க்கலாம்.
புறநானூறு படை என்ற பெயரில் தீவிரமாக இந்தித் திணிப்புக்கு எதிராக போராடி வரும் ஒரு குழுவுக்கு தலைமை தாங்குகிறார் செழியன் (சிவகார்த்திகேயன்). இதுபோல போராடுபவர்களை ஒடுக்குவதற்காகவே மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஓர் அதிகாரி (ரவி மோகன்) உடனான மோதலில் தன் நண்பனை இழக்கும் செழியன், அதன் பிறகு போராட்டங்களை எல்லாம் கைவிட்டு குடும்பத்தை கவனிக்கச் சென்று விடுகிறார்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு செழியனின் தம்பி சின்னத்துரை (அதர்வா) மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் தன் நண்பர்களுடன் ஈடுபடுகிறார். இந்தப் போராட்டங்களை ஒடுக்க காவல் துறைக்கு வானளாவிய அதிகாரத்தை மத்திய அரசு வழங்க உத்தரவிடுகிறது. இதன் பிறகு என்னவானது என்பதே ‘பராசக்தி’ படத்தின் திரைக்கதை.
வெளியாவதற்கு முன்பே சென்சார் பிரச்சினை, பல முக்கிய காட்சிகள் கத்தரிப்பு என விவாதப் பொருளாகி ஒருவழியாக சொன்ன தேதியில் வெளியாகிவிட்டது படம். படத்தின் ட்ரெய்லரில் இடம்பெற்ற வசனங்கள், அண்ணாவின் கேமியோ என எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியிருந்தது. இந்த எதிர்பார்ப்புகளுக்கு படம் நியாயம் செய்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.
வரலாற்றுச் சம்பவங்களுக்கு நடுவே கற்பனை கதாபாத்திரங்களை மையப்படுத்தி, அதை முடிந்த அளவு நேர்த்தியாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுதா கொங்கரா.
படத்தில் பாராட்டப்பட வேண்டிய முக்கியமான விஷயங்களில் ஒன்று... இதை முழுக்க முழுக்க ஒரு பிரச்சார படமாக ஆகிவிடாத வகையில் திரைக்கதை அமைக்கப்பட்ட விதம். சற்றே பிசகினாலும் ஒருசார்பு நிலை எடுத்துவிடக்கூடிய அபாயம் இருக்கும் கதைக்களத்தை மிக கவனமாக கையாண்டிருக்கிறார். மற்றொன்று இதன் டெக்னிக்கல் அம்சங்கள், இசை, ஒளிப்பதிவு, கலை அலங்காரம் என படக்குழு மொத்தமும் அதன் உழைப்பை கொட்டி இருக்கிறது.
’அமரனுக்கு’ பிறகு சிவகார்த்திகேயனுக்கு மிக முக்கியமான படம். நடிகராக அவருக்கு பேர் சொல்லும் படம். முதல் முறையாக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ரவிமோகன். அவர் வரும் காட்சிகளில் எல்லாம் மிரட்டல். ஸ்ரீலீலாவுக்கு முதல் தமிழ் படம் இது. நடிகை வைஜயந்தி மாலாவின் தோற்றத்தை நினைவூட்டுகும் மேக்கப்பில் ஆங்காங்கே ஓவர் ஆக்டிங் தெரிந்தாலும், ஒட்டுமொத்தமாக தனது கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்கிறார். சில முக்கிய நடிகர்களின் கேமியோ படத்தில் உள்ளன. அவர்கள் வரும் காட்சிகள் சிறப்பு.
படத்தின் பலவீனம் என்று பார்த்தால், சிவகார்த்திகேயன் - ஸ்ரீலீலா இடையிலான காதல் காட்சிகள் தான். முதல் பாதியில் ஏறக்குறைய அரைமணி நேரத்துக்கு மேல் ஓடும் இந்தக் காட்சிகள் படத்துக்கு தேவையே இல்லாதது. இதில் அடுத்தடுத்து இரண்டு பாடல்கள் வேறு நம் பொறுமையை சோதிக்கின்றன. ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள் என்ற பெயரில் இதுபோன்ற படங்களில் வைக்கப்படும் காதல் காட்சிகள் பெரும்பாலும் வலிந்து திணிக்கப்பட்டதாகவே இருப்பதன் மர்மம் தெரியவில்லை.
இடைவேளைக்கு முன்னதாக வரும் 20 நிமிடங்கள் காட்சிகள் தீயாக இருக்கின்றன. அந்த ஒட்டுமொத்த காட்சியும் எழுதப்பட்ட விதம் அட்டகாசம். கைதட்டல் காதை பிளக்கிறது. இத்தனை வெட்டுகளுக்கு மத்தியில் இந்தக் காட்சி சென்சாரில் தப்பித்ததே ஆச்சர்யம்.
இப்படி விறுவிறுப்பாக எழுதப்பட்ட காட்சியால் ஏற்பட்ட உணர்வெழுச்சியில் ஒரு வாளி தண்ணீரை ஊற்றும்படியாக இடைவேளை முடிந்தபிறகே ஒரு காதல் பாட்டை வைத்திருக்கிறார்கள். இதுபோன்ற ஸ்பீடு பிரேக்கர்களையும் சேர்த்து சென்சார் கத்தரி போட்டிருந்தால் படத்தின் நீளமாவது குறைந்திருக்கும்.
1965-ல் நடந்த பொள்ளாச்சி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை பதிவு செய்த விதம் சிறப்பு. படத்தில் சில மறைந்த தமிழக அரசியல் தலைவர்களின் கேமியோ வரும் இடம் கூஸ்பம்ப்ஸ் ரகம். ஏகப்பட்ட கட் + மியூட் செய்திருந்தாலும் படத்தின் நோக்கத்தில் அவை எந்த தாக்கத்தையும் செலுத்தவில்லை.
மொத்தத்தில் முதல் பாதியில் தேவையற்ற காதல் காட்சிகளையும், பாடல்களையும் குறைத்து விட்டு கதைக்கருவுக்கு தொடர்புடைய காட்சிகளை கூடுதலாக சேர்த்து திரைக்கதையின் வீரியத்தை கூட்டியிருந்தால் இன்னும் கொழுந்து விட்டு எரிந்திருக்கும் இந்த ‘பராசக்தி’.