தமிழ் சினிமா

‘பராசக்தி’ படத்துக்கு எதிராக பரப்பப்படும் வன்மம்: படக்குழு காட்டம்

ஸ்டார்க்கர்

‘பராசக்தி’ படத்துக்கு எதிராக பரப்பப்படும் வன்மம் குறித்து படக்குழுவினர் காட்டமாக பதிவிட்டுள்ளனர்.

ஜனவரி 9-ம் தேதி விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’, ஜனவரி 10-ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ ஆகிய படங்கள் வெளியாவதாக இருந்தன. இதில் தணிக்கை அதிகாரிகளுடன் ஏற்பட்ட பிரச்சினையால் ‘ஜனநாயகன்’ வெளியாகவில்லை. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. ஆனால், ஜனவரி 10-ம் தேதி திட்டமிட்டப்படி ‘பராசக்தி’ வெளியானது.

’ஜனநாயகன்’ வெளியாகாததை முன்வைத்து, ‘பராசக்தி’ படத்திற்கு விஜய் ரசிகர்கள் எதிர்மறை விமர்சனங்கள் பரப்புவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ‘பராசக்தி’ படத்தின் க்ரியேடிவ் புரொடியூசர் தேவ் ராம்நாத் தனது எக்ஸ் தளத்தில், “நாங்கள் உங்கள் படத்துடன் எங்கள் படத்தையும் வெளியிடுகிறோம் என்பதற்காக, எங்கள் படத்தைச் சீர்குலைக்க உங்களுக்கு உரிமை இல்லை.

நாங்கள்தான் எங்கள் வெளியீட்டுத் தேதியை முதலில் அறிவித்தோம். உங்கள் படத்தை நிறுத்த நாங்கள் முயற்சித்தோமா? ஒருபோதும் இல்லை. தடைகளைத் தாண்டுவதற்காக, சென்னை மற்றும் மும்பையில் உள்ள தணிக்கைத் துறை அலுவலகத்தில் நான் ஒவ்வொரு நாளும் இருந்தேன். உங்கள் குழு கையாண்டது போலவே நாங்களும் எங்கள் தணிக்கைப் பிரச்சினைகளைக் கையாண்டோம்.

பட வெளியீட்டிற்கு 18 மணி நேரத்திற்கும் குறைவாக இருந்தபோதே எங்களுக்குத் தணிக்கைச் சான்றிதழ் கிடைத்தது. எதிர்மறையான விமர்சனங்கள், பழைய வீடியோக்களை பயன்படுத்துவது, மக்களைத் தூண்டிவிடுவது, திரையரங்குகளில் அரசியல் கோஷங்களை எழுப்புவது, புக்மைஷோ மதிப்பீடுகளைக் கையாளுவது. இது போட்டி அல்ல.

கடந்த ஆண்டும் ஒரு பெரிய படத்திற்கு நீங்கள் இதையே செய்தீர்கள். ஒரு சினிமா ரசிகனாகச் சொல்கிறேன், இது நம்மில் யாருக்கும் ஆரோக்கியமானதல்ல. ’பராசக்தி’ என்பது நாம் தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய ஒரு மாணவர் இயக்கம் பற்றிய படம். எங்கள் மாணவர்கள் போராடியது போலவே நாங்களும் இதை எதிர்த்துப் போராடுவோம்” என்று தெரிவித்துள்ளார் தேவ் ராம்நாத். இந்தப் பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

SCROLL FOR NEXT