சென்னை: “பாரதிராஜா ஒரு தனி வெடிப்பு. தமிழ் சினிமாவின் திசையையும் மொழியையும் மாற்றிய படைப்பாளர். எளிய மக்களின் வாழ்வையும், உணர்வுகளையும் அசலான கலை வடிவமாக உயர்த்திக் காட்டியவர் பாரதிராஜா” என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழ்ந்த இயக்குநர் பாரதிராஜா, வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். இதையொட்டி, திரைபிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் தளத்தில், “பாரதிராஜா ஒரு தனி வெடிப்பு. தமிழ் சினிமாவின் திசையையும் மொழியையும் மாற்றிய படைப்பாளர். என் போன்ற எண்ணற்றோருக்கு அவர் ஒரு பெரும் உத்வேகம்.
எளிய மக்களின் வாழ்வையும் உணர்வுகளையும் அசலான கலை வடிவமாக உயர்த்திக் காட்டியவர். மண்ணின் மணத்தையும் மனிதர்களின் உண்மையையும் திரையில் நிலைநிறுத்திய அந்த மகத்தான கலைஞருக்கு என் மனமார்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று (ஜூன் 10) காலை காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.