பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வேட்டுவம்’ படம் 2027-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை எக்ஸ் தள பக்கத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘வேட்டுவதின் சக்திகள் தங்களின் வெறியையும் ஆதிக்கத்தையும் வெளிப்படுத்த தயாராக இருக்கின்றன. 2027 ஜனவரி பொங்கல் முதல் வேட்டுவம்’ என்று தெரிவித்துள்ளார்.
சாய் தேவானந்த் மற்றும் சாய் வெங்கடேஸ்வரனின் லேர்ன் அண்ட் டீச் பேனருடன் இணைந்து தனது நீலம் புரெடக்ஷன் மூலமாக பா.ரஞ்சித் தயாரித்திருக்கும் ‘வேட்டுவம்’ படம் பற்றிய அறிவிப்பும், முதல் தோற்றமும் 2022-ம் ஆண்டு நடந்த 75-வது கேன்ஸ் பட விழாவில் வெளியிடப்பட்டது.
மூன்று வெவ்வேறு குழுக்கள் அதிகாரத்துக்காக நிகழ்த்தும் அரசியல் போட்டி, மோதல்களை மையமாகக் கொண்ட களங்கள். ‘அபோகலிப்டிக்’ ஆக்ஷன் திரைப்படமாக ‘வேட்டுவம்' உருவாகி இருக்கிறது.
இந்தப் படத்தில் தமிழர்களின் சிலம்பம், மால்கம் போன்ற பாரம்பரியத் தற்காப்புக் கலைகள், அவற்றின் அடிமுறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என படத்தினை பற்றி படக்குழு தெரிவித்துள்ளது.
இந்தப் படத்தில், ஆர்யா, வி.ஆர்.தினேஷ், சோபிதா துலிபாலா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன், கலையரசன், மைம் கோபி, குரு சோமசுந்தரம், ஷபீர் கல்லாரக்கல், ஜான் விஜய், சாய் தீனா, ஆனந்த் சாமி, ஹரிஸ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருக்கும் இப்படத்துக்கு ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு, செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகும் என படத்தின் அறிமுக வீடியோவில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.