தமிழ் சினிமா

ஓ.ம்: விமர்சனம் - நடிப்பு அரக்கர்களும், ஆன்மா இல்லாத ஸ்பை த்ரில்லரும்!

சல்மான்

‘அமரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ராஜ்குமார் பெரியசாமி தற்போது ஒரு ஸ்பை த்ரில்லர் கதைக்களத்தை கையில் எடுத்திருக்கிறார். செம்மரக் கடத்தல் பின்னணியுடன் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி என ‘நடிப்பு அரக்கர்கள்’ கூட்டணியுடன் பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகியுள்ள ‘ஓ.ம்’ படம் எப்படி இருக்கிறது என பார்க்கலாம்.

சட்டவிரோத செம்மரக் கடத்தல் கும்பலையும், அதன் தலைவனான சியா என்னும் ‘பர்மா’ கார்த்திகேயனை (மம்மூட்டி) பிடிக்கும் பொறுப்பு காவல் துறை அதிகாரி நித்யா ரெட்டியிடம் (சாய் பல்லவி) ஒப்படைக்கப்படுகிறது. அவருக்கு உறுதுணையாக இருக்க திருக்குமரன் என்ற அதிகாரி நியமிக்கப்படுகிறார். சியாவின் கூட்டத்துக்குள் ஓர் உளவாளியாக நுழையும் திரு, சியாவின் நம்பிக்கைக்குரிய நபராக ஒரு சில நாட்களிலேயே உயர்கிறார்.

சியாவைப் பற்றியும் அவரது தொடர்புகள் பற்றியும் தெரிந்து கொண்டு அவ்வப்போது உயரதிகாரிகளுக்கு தகவல் அனுப்புகிறார். சியா மூலமாக ஒட்டுமொத்த கடத்தல் கும்பலுக்கும் தலைவனாக இருக்கும் அப்துல் ஹமீத் (நஸ்ருதீன் ஷா) என்பவரை நெருங்க போலீஸ் திட்டமிடுகிறது. அவர்களின் நோக்கம் நிறைவேறியதா, செம்மரக் கடத்தல் கும்பல் பிடிபட்டதா என்பதே படத்தின் மீதிக் கதை.

கதையின் தொடக்கம் மிகவும் நம்பிக்கையூட்டும் விதமாக அமைந்துள்ளது. சாய் பல்லவியின் அறிமுகம், தனுஷ் அறிமுகமாகும் வியக்க வைக்கும் சிங்கிள் ஷாட் காட்சி என ஆரம்ப காட்சிகளிலேயே நம்மை நிமிர்ந்து உட்கார வைத்து விடுகிறார் இயக்குநர். ட்ரெய்லரிலேயே தனுஷ் யார் என்று சொல்லிவிடுவதால் பெரிதாக ஆடியன்ஸுக்கு அதை நிறுவ இயக்குநர் மெனக்கடவில்லை. தனுஷின் குடும்பப் பின்னணி, மம்மூட்டியின் கடத்தல் தொழில், ஸ்ரீலீலா - தனுஷ் இடையிலான காட்சிகள் என அடுத்தடுத்த காட்சிகள் சுவாரஸ்யமாகவே நகர்கின்றன.

எனினும் ஒரு மிகப் பெரிய கடத்தல் கும்பல் தலைவனாக இருக்கும் மம்மூட்டியின் நம்பிக்கையை பெறுவதாக தனுஷுக்கு வைக்கப்பட்ட காட்சிகள் எல்லாம் அரதப் பழைய ரகம். இருவரும் அறிமுகமாக இரண்டாவது காட்சியிலேயே தனுஷை கையோடு கூட்டிச் சென்று தான் எங்கெல்லாம் செம்மரத்தை மறைத்து வைத்திருக்கிறேன் என்பதை விலாவாரியாக மம்மூட்டி காட்டுவெத்தால் டூ மச்.  

‘போக்கிரி’ போன்ற படங்கள் ரகசிய போலீஸ் கதாபாத்திரங்களுக்கு ஒரு வணிக ரீதியான மாஸ் இலக்கணத்தை வகுத்திருந்த நிலையில், ராஜ்குமார் பெரியசாமி இதில் மிகவும் யதார்த்தமான அணுகுமுறையைக் கையாள முயன்றுள்ளார். ஆனால், அந்த யதார்த்தத்தைத் தக்கவைக்கும் முயற்சியில் கதையின் வேகத்தையும் சுவாரசியத்தையும் அவர் கோட்டைவிட்டிருக்கிறார்.

முதல் ஒரு மணிநேரம் ஓரளவுக்கு விறுவிறுப்பாகச் சென்றாலும், அதன்பிறகு கதை வழக்கமான, எளிதில் யூகிக்கக்கூடிய பாதைக்குத் மாறுகிறது. அவசர கோலத்தில் காட்சிகள் நகர்வது போன்ற ஹரி படங்களை நினைவூட்டும் அதிவேக எடிட்டிங் பாணி, ஏராளமான தகவல்களையும் கதாபாத்திரங்களையும் திணிப்பதால் பார்வையாளர்களுக்குத் தலைசுற்றலை ஏற்படுத்துகிறது.

திரைக்கதையில் பல இடங்களில் இயக்குநர் பார்வையாளர்களை சாதாரணமாக எடைபோட்டுவிட்டாரோ என்ற எண்ணம் எழுகிறது. துபாயில் இருந்து இயங்கும் ஒரு சர்வதேசக் கடத்தல் தலைவன், தன்னைப் பார்க்க வருபவர்களின் பேண்ட் பாக்கெட்டுகளில் ஒட்டுக்கேட்கும் கருவிகள் இருக்கிறதா என்று கூட சோதனை செய்யாமல் இருப்பது அபத்தமாக தெரிகிறது.

இடைவேளைக்கு முன்பாக வரும் உணர்வுபூர்வமான காட்சி படத்தின் மிகச் சிறந்த தருணமாக அமைந்து, இரண்டாம் பாதியின் மீதான எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது. ஆனால், இடைவேளைக்குப் பிறகு மையப் பிரச்சினையிலிருந்து விலகிப் பல கிளைக் கதைகளுக்குள் திரைக்கதை சிதறுவதால், முதல் பாதியின் இறுதியில் கட்டமைக்கப்பட்ட பதற்றம் மொத்தமாகக் காணாமல் போகிறது. 

மம்மூட்டியை காப்பாற்ற நடக்கும் நீண்ட ஜெயில் சண்டை காட்சியும், அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் நடக்கும் திருப்பமும் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் மிகவும் சலிப்பூட்டுகின்றன. ‘ஆபரேஷன் மோல்’ என்ற தலைப்புக்கு நியாயம் சேர்க்காத மிகவும் மந்தமான க்ளைமாக்ஸ் மற்றும் இரண்டாம் பாகத்துக்கான அறிவிப்பு ஆகியவை பார்வையாளர்களின் சோர்வை அதிகரிக்கின்றன.

மம்மூட்டி, தனுஷ், சாய் பல்லவி என ராட்சஷ கலைஞர்கள் பலர் இருப்பது படத்துக்குப் பெரிய பலம். தனுஷ் இந்த கதைக்கு மிகவும் இயல்பாகப் பொருந்தியுள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளிலும் சரி, இடைவேளைக்கு முன்பாக உடைந்து அழும் உணர்வுபூர்வமான காட்சியிலும் சரி, அறிமுகப் பாடலில் நடனமாடுவதிலும் சரி, தனது முத்திரையை அழுத்தமாகப் பதிக்கிறார்.

‘பேரன்பு’ படத்துக்குப் பிறகு தமிழில் தோன்றியிருக்கும் மம்மூட்டி, சியா கதாபாத்திரத்துக்கு தனது கம்பீரத்தால் உயிர் கொடுத்திருந்தாலும், அவரது நடிப்புத் திறமைக்குத் தீனி போடும் அளவுக்கு அந்தப் பாத்திரம் எழுதப்படவில்லை. தனது சகாக்களுக்கு உத்தரவிடுவதைத் தாண்டி அவருக்குப் படத்தில் பெரிய வேலையில்லை. ரிலீஸுக்கு முன்பு நடந்த படவிழாவில் அவர் புலம்பியதற்கான காரணம் புரிகிறது. அதேபோல, இந்திய சினிமாவின் மிகச் சிறந்த நடிகர் நஸ்ருதீன் ஷாவும் பலவீனமான வில்லன் பாத்திரத்தால் வீணடிக்கப்பட்டுள்ளார்.

சாய் பல்லவி காவல் துறை அதிகாரியாகச் சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் மெனக்கெட்டிருக்கிறார். தனுஷின் மனைவியாக வரும் ஸ்ரீலீலா வெறும் மூன்று நான்கு காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார். தனுஷின் தந்தையாக இந்திரன்ஸ் தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களைச் சிறப்பாக செய்துள்ளார்.

எழில் அரசுவின் கேமரா படத்தின் மிகப் பெரிய பலம். ஆக்‌ஷன் காட்சிகளில் படத்தின் ஒரு கதாபாத்திரமாகவே மாறி பயணிக்கிறது. இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தனது முந்தைய படங்களான ‘பத்தா’ மற்றும் ‘கருப்பு’ அளவுக்கு இதில் சோபிக்கவில்லை. அவரது பின்னணி இசை பல இடங்களில் அனிருத்தின் பாணியைப் பின்பற்ற முயன்று, பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுகிறது. ‘வீழா வீரா’ மற்றும் ‘அலாக்கா லூவா’ பாடல்கள் திரையரங்கில் உற்சாகத்தைக் கொடுத்தாலும், இனிமையான ‘செஞ்சுடரே’ பாடல் அதிவேக எடிட்டிங்கால் வீணடிக்கப்பட்டுள்ளது.

படத்தில் தேவைக்கு அதிகமான காட்சிகளைப் படமாக்கிவிட்டு, எதை வைப்பது எதை நீக்குவது என்று தெரியாமல் படக்குழு திணறியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. ’துரந்தர்’ போன்ற ஒரு ஸ்பை த்ரில்லர் ஆபரேஷன் கதைக்கு இருக்க வேண்டிய மர்மமும், எப்போது மாட்டிக்கொள்வோமோ என்ற பதற்றமும் இரண்டாம் பாதியில் முற்றிலுமாக இல்லை. தனுஷுக்கும் மம்மூட்டிக்கும் இடையே வலுவான உறவையோ அல்லது ஓர் அனல் பறக்கும் மோதலையோ உருவாக்கியிருந்தால் ‘ஓ.எம்’ ஒரு மறக்க முடியாத அனுபவமாக மாறியிருக்கும். 

அற்புதமான நடிகர் பட்டாளமும், நல்லதொரு கதைக்களமும் இருந்தும், ஆன்மா இல்லாத அரைகுறை திரைக்கதையால் ராஜ்குமார் பெரியசாமி தவறவிட்ட ஒரு பொன்னான வாய்ப்பாகவே இந்த ‘ஓ.ம்’ எஞ்சுகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT