தமிழ் சினிமா

“மரணத்தை விட மரண பயம் கொடுமையானது” - ‘நீளிரா’ இயக்குநர்

ஸ்டார்க்கர்

மரணத்தை விட மரண பயம் கொடுமையானது என்று ‘நீளிரா’ படம் குறித்து விவரித்தார் இயக்குநர் சோமிதரன்.

ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நீளிரா’. ஏப்ரல் 3-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில் நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக செல்வரத்னம் பிரதீபன், இசையமைப்பாளராக கே ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர்.

          

இந்தச் சந்திப்பில் இயக்குநர் சோமீதரன் பேசுகையில், “சின்ன வயதில் போர் நடந்து கொண்டிருக்கும் போது தமிழகத்திலிருந்து திரைப்படங்கள் வெளியாகும். அந்தப் படங்களை பார்க்கும்போது எனக்குள் ஓர் ஆசை இருந்தது. எனக்கு மட்டுமல்ல, என்னைப் போன்ற ஏராளமான ஈழத்து கலைஞர்களுக்கும் இருந்தது. என்றைக்காவது ஒருநாள் இந்த பெரிய திரையில் எங்களுடைய மொழியை கேட்க முடியாதா, என்னுடைய ஊரின், என்னுடைய வீட்டின் ஏதேனும் ஒரு காட்சியை திரையில் பார்த்து விட இயலாதா என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. அந்த ஏக்கம் இன்று சாத்தியப்பட்டிருக்கிறது.

இத்தனை ஆண்டுகால தமிழ் சினிமாவில் ஈழத்திலிருந்து பாலு மகேந்திரா தொடங்கி ஏராளமான கலைஞர்கள் பலர் முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த முயற்சியின் ஒரு தொடர்ச்சியாக இது சாத்தியப்பட்டிருக்கிறது. அதனை சாத்தியப்படுத்துவதற்கான முதல் புள்ளியை வைத்த இயக்குநர் - நண்பர் கார்த்திக் சுப்பராஜுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உலகம் முழுவதும் உள்ள ஈழத் தமிழர்களுக்கு எங்களுடைய வீட்டில் சமைக்கும் புட்டு உணவு பண்டத்தை பெரிய திரையில் பார்த்திட மாட்டோமா என்ற எண்ணம் இருந்தது, அது இன்று சாத்தியமாகி இருக்கிறது.

ஹாலிவுட்டிலிருந்து நிறைய போர் திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்தப் படங்களை நாம் கொண்டாடியிருக்கிறோம். அந்த படங்களில் இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுடுவதையும் சுடப்படுவதையும் பார்த்திருக்கிறோம். இன்றைக்கு உலகம் போர்ச் சூழலில் இருக்கிறது. தினம் நாம் போர் பற்றிய செய்திகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம், கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

இந்தச் செய்திகளில் குண்டுகளின் எண்ணிக்கையை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.‌ ஆனால் இதற்குப் பின்னால், குண்டு விழுகின்ற இடத்தில், அது இஸ்ரேலாக இருந்தாலும் சரி, ஈரானாக இருந்தாலும் சரி... அங்கும் மக்கள் இருப்பார்கள். அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கும்.

குண்டு விழுகின்ற அந்த நேரத்தில் அவர்கள் ஒரு பிறந்த நாளை கொண்டாடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம், அவர்கள் ஒரு கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்திருக்கலாம், அங்கு ஒரு மரணம் நிகழ்ந்திருக்கலாம், ஏதோ ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம். அங்கு குண்டு விழுந்த பிறகு என்னவாகும்? அந்த சூழ்நிலையை எப்படி மாற்றும்? அவர்கள் எப்படி பதட்டமடைவார்கள்? அந்த பதற்றமான வாழ்க்கை இருக்கிறதல்லவா, அப்படிப்பட்டதொரு வாழ்க்கையை சொல்லும் படம்தான் ‘நீளிரா’.

நாம் போர் படங்களை பார்க்கும்போது எப்போதும் இரு தரப்பினரின் தாக்குதலை பற்றிய படங்களாக தான் பார்த்திருக்கிறோம். இந்தப் பக்கம் ஒரு ஆயிரம் துப்பாக்கி, அந்தப் பக்கம் ஒரு ஆயிரம் துப்பாக்கி, குண்டுகள் முழங்கும், துப்பாக்கிகள் சுடும் காட்சிகளைத் தான் பார்த்திருக்கிறோம். இதற்கு நடுவில் மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்று ஒரு வாழ்க்கை இருக்கிறது. போர் என்றால் இரு தரப்பிலிருந்து சுடும் துப்பாக்கிகள் என்று மட்டும்தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நிஜம் அதுவல்ல.

போருடன் கூடிய வாழ்க்கை தான் எங்கள் வாழ்க்கை. பிறந்ததிலிருந்து என்னுடைய முழு இளமைக்கால வாழ்க்கையும் போருக்குள் தான் இருந்தது. அந்தப் போருக்குள் தான் நாங்கள் படித்தோம். அந்த போருக்குள் தான் எங்களுடைய சிறு வயது விளையாட்டுகள் இருந்தது. அந்தப் போர் தான் எங்களது விளையாட்டாகவும் இருந்தது. அந்தப் போருக்குள் தான் எங்களின் காதலும் இருந்தது, போருக்குள் தான் திருமணமும் இருந்தது. அந்தப் போர் வாழ்க்கையை தான் நாங்கள் வாழ்ந்தோம்.

வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு போர் என்றால் இரு தரப்பினரும் கம்பீரமாக நிற்பதை போன்று நினைப்பார்கள். ஆனால் அதுவல்ல. போர் எங்களுடைய வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாறிவிட்டது. பகுதியாக மாறிவிட்ட போரில் எங்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது? அந்த வாழ்க்கையில் நிகழ்வுகள் எப்படி இருந்தது? அதைத்தான் இந்தப் படத்தில் நாங்கள் சொல்லி இருக்கிறோம்.

என்னைப் பொறுத்தவரை மரணத்தை விட மரண பயம் கொடுமையானது. இந்தப் படம் அந்த மரண பயத்தில் இருந்த வாழ்க்கையை சொல்கிறது. இப்படி ஏராளமான இரவுகளில் ஒரு நீண்ட இரவை பற்றிய படம்தான் நீளிரா. அந்த இரவும், அந்த இரவின் படபடப்பும், அந்த மக்களின் பதற்றமும் உங்களுக்கு நெருக்கமாக இருக்கும்.

நாங்கள் தமிழகத்தில் ஈழத்தைப் பற்றி நிறைய கதைகளை கேள்விப்பட்டிருக்கிறோம். ஈழத்தில் வீடுகள் எப்படி இருக்கின்றன? அந்த வீட்டின் குசினி (கிச்சன்) எப்படி இருக்கிறது? அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை இந்தப் படம் உங்களுக்குச் சொல்லும்.

போர் தொடங்கும்போது வாழ்க்கை படப்படப்பாக இருக்கும், ஆனால் அதற்குள் இருக்கும் வாழ்க்கையையும் அந்த வாழ்க்கைக்குள் இருக்கும் ஒரு பதற்றத்தையும் அதற்குள் நடைபெறும் ஒரு திருமணத்தைப் பற்றியும் இந்தப் படம் பேசுகிறது.

பாலு மகேந்திராவிடம் உதவியாளராக பணியாற்றிய போது அவர் ஒரு முறை என்னிடம் 'உன்னுடைய முதல் படத்திலாவது நம்முடைய கதையை படமாக உருவாக்கிடு. என்னால் இறுதிவரை எடுக்க முடியாமல் போய்விட்டது' என சொன்னார். இன்று அதனை சாத்தியப்படுத்துவதற்கு உதவிய ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்திற்கு நன்றி” என்று பேசினார் இயக்குநர் சோமிதரன்.

SCROLL FOR NEXT