எனக்கு பத்து, பதினோறு வயதிருக்கும் அப்போது. ஐந்தாவதோ, ஆறாவதோ படித்துக்கொண்டிருந்தேன். மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் எங்கள் ஊரான நாகப்பட்டினத்துக்கு வருகிறார் என்று ஒரு வாரமாகவே பேச்சாக இருந்தது.
ஊரில் எங்கு சென்றாலும் அதுதான் பேச்சு. அவர் அப்படி இருப்பார், இப்படி இருப்பார் என்று ஒவ்வொருவரும் அவரைப்பற்றி கற்பனையாக சொல்லிக்கொண்டிருப்பார்கள். அவருடைய கட்டுமஸ்தான உடல், கவர்ச்சியான தோற்றம் என எல்லாவற்றையும் படங்களில் பார்த்திருக்கிறோம்.
அதனால் நேரில் பார்க்க எல்லோரும் துடித்துக்கொண்டு இருந்தோம்! ‘சொன்ன தேதியன்று வந்து விட்டார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நாகப்பட்டினத்தில் அப்போது அவுரித்திடல் என்ற ஒன்று உண்டு. இப்போது அது பேருந்து நிறுத்தமாக மாறி இருக்கிறது. மொத்தமாக அடித்து பிடித்து கூட்டம் கூடிவிட்டது அந்த இடத்தில்.
எங்கும் மனித தலைகள். அப்படி ஒரு கூட்டத்தை அதற்கு முன் நான் பார்த்ததில்லை. எம்.ஜி.ஆரை பார்க்கும் ஆர்வத்தில் நானும் நெரிசலில் முண்டியத்து மேடைக்கு அருகில் செல்ல முயன்றேன். முடியவில்லை. பிறகு ஒரு ஓரத்தில் நின்றுகொண்டேன்.
அவர் பளிச்சென தெரிந்தார். பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்பதான தோற்றம். தேர்தல் பிரச்சாரத்துக்காக வந்திருந்த அவர், மேடையில் ஏறினார். வெள்ளை வேஷ்டி, டைட்டான சட்டை, வெள்ளை தொப்பி, கருப்புக் கண்ணாடி என புகைப்படங்களில் பார்த்த எம்.ஜி.ஆர் நேரிலும் அப்படியே இருந்தார்.
அவரைப் பார்த்ததுமே ஏதோ விவரிக்க முடியாத உணர்வு ஒன்று உடலுக்குள் ஊடுருவுவதை உணர்ந்தேன். அது ஒரு சிலிர்ப்பான அனுபவம். அப்போது 25 வயது இளைஞர் ஒருவர் பேசுவார் என்று அறிவித்ததும் எம்.ஜி.ஆரின் முன் அந்த இளைஞர் மைக்கை பிடித்தார்.
அவரால் பேச முடியவில்லை. எம்.ஜி.ஆரை அருகில் கண்ட ஆனந்தத்தில் அவருக்குப் பேச்சே வரவில்லை. எம்.ஜி.ஆர் அதை ரசித்தபடி சிரித்துக்கொண்டே இருந்தார். பிறகு அவரைத் தட்டிக்கொடுத்து விட்டு பேசினார். என்ன பேசினார் என்று ஞாபகமில்லை. பேசி முடித்து விட்டு கிளம்பிவிட்டார். அவர் கார் பின்னாலேயே பெரும் கூட்டம் ஓடியது.
அவரை பார்த்த பிரமையிலேயே எல்லோரும் இருந்தோம். எம்.ஜி.ஆரை பார்த்து விட்டோம் என்பதே எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.
அதில் இருந்து மீள்வதற்குள் மறுநாள் அதே மேடையில் நடிகர் திலகம் சிவாஜி வருகிறார் என்று தகவல்.
ஸ்கூலை முடித்துவிட்டு அவரைப் பார்க்க ஓடி வந்துவிட்டேன். அவரும் காங்கிரஸ் கட்சி பிரச்சாரத்துக்காக வந்திருந்தார். அவரைப் பார்க்கவும் சரியான கூட்டம். கூட்டத்தில் முண்டியடித்து நானும் போய் நின்றேன். அவர் பேச்சைக் கேட்டோம். எல்லோருக்கும் சுற்றி கை காட்டிக்கொண்டே சென்றார்.
அவரையும் பார்த்துவிட்டேன். இதற்கு பிறகு எம்.ஜி.ஆரை நெருக்கத்தில் பார்த்தது, சென்னையில் டி.கே.சண்முகம் அண்ணாச்சியின் மணிவிழாவில். அந்த விழாவில் மிகவும் நெருக்கத்தில் எம்.ஜி.ஆரைப் பார்த்தேன். அதற்கு பிறகும் சில முறை நெருக்கமாகப் பார்த்திருக்கிறேன்.
அப்போது அவர் முதலமைச்சராக இருந்தார். சின்னபோரூரில் நாங்கள் குடியிருந்தபோது, ஒரு பிரச்சினைக்காக ராமாவரம் தோட்டத்தில் அவரைச் சந்தித்து ஒரு மனு கொடுக்க எல்லோரும் சென்ற போது நானும் சென்று பார்த்தேன்.
பிறகு நான் ஒரு பற்பசை நிறுவனத்தில் வேலை பார்த்தபோது அவரை சாலையில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். அவர் கார் போகும்போது எல்லோரும் அவர் காருக்கு கை அசைப்பார்கள். அவர் காரின் கருப்புக் கண்ணாடியையும் மீறி உள்ளிருந்து அவர் கை காட்டுவது வெளியே தெரியும்.
அப்படிப் பார்த்திருக்கிறேன். அவரிடம் பேசுவதற்கு வாய்ப்பு இப்பிறப்பில் எனக்கு கிடைக்கவில்லை. சிவாஜி அப்பாவை, ஸ்ரீதரின் ‘வைர நெஞ்சம்’ படத்தின் படப்பிடிப்பில் பார்த்தேன். அதில் அசிஸ்டென்ட் டைரக்டராக வேலை பார்த்த ஒருவர் படப்பிடிப்புக்கு அழைத்துச் சென்றார். அப்போது பார்த்தேன் என்றாலும் பேச முடியவில்லை. அவரிடம் பேசிப் புகைப்படம் எடுத்துக்கொண்டது, ‘தேவர் மகன்’ படத்தின் டப்பிங்கில்தான்.
இப்படி இரண்டு திலகங்களையும் தரிசித்துவிட்டேன். அடுத்ததாக நான் சந்தித்து தரிசித்து அவர்கள் கையாலேயே உணவு பரிமாறி சாப்பிட வைத்த இன்னொரு திலகம், நடிகையர் திலகம் சாவித்திரி அம்மா! அப்போது அவர் ஒரு நாடகம் போட்டார். அதன் பெயர் இப்போது நினைவில்லை. அதில் என் சகோதரி ஹேமமாலினி நடித்தார்.
அபிபுல்லா சாலையில் உள்ள எஸ்.ஜி.எஸ் சபா அருகில்தான் அவர் வீடு இருந்தது. அக்காவுடன் நான் செல்லும் போது, “டேய் பாஸ்கரா” என்று வாஞ்சையாகக் கூப்பிடுவார். அப்போது என்னை உட்கார வைத்து, “சாப்பிடுறா, நல்லா சாப்பிடுறா...” என்று பரிமாறி இருக்கிறார். நான் அவர் கையால் சாப்பிட்டிருக்கிறேன்.
அந்தளவுக்கு இந்த மூன்று திலகங்களைச் சந்தித்த பாக்கியம் இந்தப் பிறப்பில் எனக்கு கிடைத்ததை பெருமையாக உணர்கிறேன். இன்றைக்கும் படப்பிடிப்புகளுக்கு தாமதமாகச் செல்லாமல் தொழிலை சரியாக செய்ய வேண்டும் என்று அவர்களைத் தொழுதுதான் பின்பற்றுகிறேன்.
(திங்கள் தோறும் பேசுவோம்)