எனக்கு திரைப்பட வாய்ப்புகள் நல்லபடியாக வந்து கொண்டிருக்கின்ற நேரத்தில், அதை மேலும் சிறப்பாக்குவதற்காக, நாட்டரசன் கோட்டையில் இருந்து எனக்காக வந்தவர்தான், இயக்குநர் பேரரசு.
அவருடைய முதல் படமான ‘திருப்பாச்சி’யில் நடிக்கும் போதுதான் அவருடன் பழக்கம் ஏற்பட்டது. காரைக்குடியில் நடந்த படப்பிடிப்பில் அவரை நான் சந்தித்தேன். அந்தப் படத்தில் கல்யாண தரகராக நடித்திருப்பேன். இன்றைய முதல்வர் விஜய்யுடன் நடித்தேன்.
முதலில் பார்த்த போதே நெடுநாள் பழக்கமானவர் போல நெருக்கமாகி விட்டார் பேரரசு அவர்கள். நல்ல அருமையான காமெடி சென்ஸ் உள்ளவர். படப்பிடிப்பில் அவர் அடிக்கிற ஜோக்குகள் அவ்வளவு பிரமாதமாக இருக்கும். படத்தில் நடிக்கிறவர்களுக்கு மாடுலேஷனை அவர் அவ்வளவு அருமையாக சொல்லிக் கொடுப்பார்.
காரைக்குடி அருகில் உள்ள ஊர் ஒன்றில் அப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது, அரிவாள் செய்யக்கூடியவர்கள் எல்லோரும் அங்கு வந்தார்கள். அரிவாள்களை எப்படி உருவாக்குகிறார்கள் என்பதையெல்லாம் பார்த்தேன்.
தனக்கு என்ன, எப்படி வேண்டும் என்பதை நடிகர்களிடம் தெளிவாக விளக்குவார் பேரரசு. வேலை வாங்குவதிலும், ரொம்ப கெட்டிக்காரர். ஒருவருக்கு இவர் சொல்லிக் கொடுக்கிற மாடுலேஷன் சரியாக வர வில்லை என்றால், அவருக்கு என்ன வருகிறதோ அதை வைத்து படமாக்கி விட்டு டப்பிங்கில் சரி பண்ணிக்கொள்ளலாம் என்ற நெளிவு சுளிவு தெரிந்த இயக்குநர்.
‘திருப்பாச்சி’ படத்துக்கு பிறகு அவர் இயக்கிய ‘சிவகாசி’ படத்திலும் நடித்தேன். தொடர்ந்து அவருடைய அனைத்து படங்களிலும் நடித்திருக்கிறேன். அவர் எப்போது வேண்டுமானாலும் ஃபோன் பண்ணி படப்பிடிப்புக்கு அழைப்பார்.
போவேன். இப்போது சமீபத்தில் கூட நான் அவரிடம் பேசினேன். இப்படி ஒதுங்கியே இருந்தால் எப்படி? நீங்கள் சீக்கிரமா படம் இயக்க வேண்டும்” என்றேன். சரி என்று கேட்டுக் கொண்டார்.
சமுதாயத்தில் நடக்கக்கூடிய, சில விஷயங்களுக்கு ஆதரவாகவும் சில விஷயங்களைகண்டித்தும் குரல் கொடுக்கக்கூடிய பொது நல சிந்தனை உடையவர். அவருடைய தகப்பனார், தாத்தா எல்லோரும் அவர்கள் ஊரில் பெரிய தலைக்கட்டு மாதிரி. அம்பலம் என்று சொல்வார்கள்.
அதைக் கேள்விப்பட்டு, நான் அவரை அம்பலம் என்றுதான் கூப்பிடுவேன். அவருடைய தம்பி முத்து வடுகை சின்ன அம்பலம் என்பேன். இப்போது கூட அவருடைய பெயரை பெரியம்பலம் என்றுதான் போனில் ‘சேவ்’ செய்து வைத்திருக்கிறேன்.
அவருடைய ‘சிவகாசி’ படத்திலும் விஜய் சார் ஹீரோ. அதில் நான், மறைந்த சிட்டிபாபு, பாடகர் ராம் என எல்லோரும் நடித்தோம். சரியாக 12.30 மணிக்குக் கூப்பிடுவார். “இப்போது உங்களுக்கு ஷாட் இல்லை.
வேற சில காட்சிகள் எடுக்கப் போகிறேன், நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு 3.30-க்கு வாங்க” என்று முதலிலேயே சொல்லி விடுவார். யாருக்கு எப்போது ஷாட் என்பதை சரியாக மனதில் வைத்திருப்பார். சிவகாசி’க்கு பிறகு ‘திருப்பதி’யில் தம்பி அஜித் உடன் நடித்தேன். அப்புறம் பரத்துடன் ‘பழனி’யில் நடித்தேன்.
அவருடைய இயக்கத்தில் வெளியான ‘தர்மபுரி’ படத்தில் விஜயகாந்த் அண்ணாவுடன் நடித்தேன். கதைப்படி நான் அவர் வீட்டில் வேலை பார்க்கும் வேலைக்காரன். ஆனால், அந்த கேரக்டர் ஓனர் மாதிரியும், விஜயகாந்த் அண்ணா, அவருக்கு சர்வன்ட் மாதிரியும் வரும் என்று பேரரசு சொன்னபோது, “நல்லா இருக்கே பண்ணலாமே” என்று விஜயகாந்த் அண்ணா சொல்லியிருக்கிறார்.
அவ்வளவு பெரிய ஹீரோ, எனக்கு முக்கியத்துவம் கொடுத்து என் பின்னால் கையை கட்டிக்கிட்டு நிக்கவா? என்று கேட்காமல், அவ்வளவு பெருந்தன்மையாக நடித்தார். அதே போல, நல்ல கற்பனை வளம் கொண்டவர் இயக்குநர் பேரரசு.
நல்ல பாடலாசிரியர், வசனகர்த்தா, இசை அமைக்கவும் தெரியும் அவருக்கு. அந்த அளவுக்கு சகல திறமைகளும் கொண்ட ஒருவர் அவர். “இந்த ஷாட்டை இப்படி வச்சுக்கலாம், அந்த ஷாட்டை அப்படி வச்சுக்கலாம்” என்று உடனே முடிவு பண்ணுவார்.
ஒரு நாள் காலை படப்பிடிப்பில் அவரும் நானும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது யாரோ ஓர் அம்மா வந்தார். என்னிடம் வந்து, “உங்களை எனக்குத் தெரியும்” என்று சொன்னார். நான் யாருடைய அம்மாவாகவாவது இருக்குமோ? என்று நினைத்து, “எப்படிம்மா தெரியும்?” என்று கேட்டேன்.
“நான்தான் உங்களை தினமும் டிவியில பார்க்கிறேனே” என்றார். பேரரசு குபுக் என்று சிரித்துவிட்டார். நான் சொன்னேன், “அம்பலம், வேண்டாம். என்னை வெறிப்பேத்துற மாதிரி நீங்க சிரிக்கிறீங்க. உங்களுக்கும், இதே மாதிரி ஒரு இக்கட்டு சீக்கிரம் வரும்” என்றேன்.
“அதெல்லாம் எனக்கு ஒன்றும் வராது. நான் ரொம்ப உஷாராக இருக்கிறவன்” என்றார். அந்த அம்மா போய்விட்டார். சிறிது நேரம் கழித்து வேற ஒருவர் வந்தார். “சார், வணக்கம். என்னை தெரியுதா?” என்று கேட்டார், பேரரசுவிடம்.
“இவ்வளவு உரிமையாகக் கேட்கிறாரே? எங்க பார்த்திருப்போம்?” என்று யோசித்துவிட்டு, “பார்த்திருக்கேன். நீங்க அவரோட பிரதரா? அந்த படத்துல நீங்க ஒர்க் பண்ணீங்களா? அதுவா, இதுவா?” என்று என்னென்னவோ ஏழெட்டு கேள்வி கேட்டார்.
ஒரு கட்டத்தில் “நீங்களே சொல்லுங்க” என்றார் பேரரசு. அவர், “நீங்க கார்ல வந்து அந்த வளைவுல திரும்பும் போது, நான்தான் அந்த டீ கடை கிட்ட இருந்து உங்களுக்கு டாட்டா காண்பிச்சேன்” என்றார். நான் அப்படியே திரும்பி அவரைப் பார்த்தேன்.
“அண்ணே, அப்படி பார்க்காதீங்க, நீங்க சொன்னது உடனே பலிச்சுப் போச்சு எனக்கு” என்றார். எங்கள் இருவருக்கும் எப்போதுமே பாசமான பிணைப்பு உண்டு. அவருடைய அனைத்துப் படங்களிலும் எனக்கு அருமையான கதாபாத்திரம் கொடுத்து விடுவார்.
‘திஹார்’ படத்துக்கு பிறகு அவர் படம் இயக்கவில்லை. அவர் இப்படி ஒதுங்கி இருப்பது, எனக்கு மிகப்பெரிய நஷ்டமாக நினைக்கிறேன். அவர் படம் பண்ணாமல் இருப்பதில் எனக்கு வருத்தம். அவர் சீக்கிரமாக படம் பண்ண வேண்டும், எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். பழைய வேகத்துடன் சீக்கிரம் வாங்க அம்பலம்.
(திங்கள் தோறும் பேசுவோம்)