தமிழ் சினிமா

‘மொழி’ தந்த விருது - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 35

Guest Author

நான் சின்​னத்​திரை தொடர்​களில் நடித்​துக்​கொண்​டிருந்த நேரத்​தில், அதை விட்​டு​விட்டு முழு நேர​மாக சினி​மா​வில் கவனம் செலுத்த இயக்​குநர் ஒரு​வர் அறி​வுரை கூறி​யிருந்​தார் என்று ஏற்​கெனவே சொல்லி இருக்​கிறேன். அதனால் இனி சினி​மா​தான் என்று முடிவு செய்​திருந்​தேன்.

அது 2004-ம் ஆண்​டு. எனக்கு ஒரு போன் அழைப்பு வந்​தது. “நான் பாண்​டியன்னு புரொடக் ஷன் மேனேஜர் பேசுறேன்” என்​றார். “சொல்​லுங்க தம்​பி“என்​றேன். “பிர​காஷ்​ராஜ் சாரோட டூயட் மூவிஸ் நிறு​வனத்​துல இயக்​குநர் ராதாமோகன் ஒரு படம் பண்​றார்.

அதுல நடிக்​கிறது தொடர்பா உங்​ககிட்ட பேசணும், ஆஃபீஸுக்கு வர முடி​யு​மா?” என்​றார். பிர​காஷ்​ராஜ் அலு​வல​கத்துக்​குச் சென்​றேன். இயக்​குநர் ராதாமோகனை சந்​தித்​தேன். “அழகிய தீயே என்​றொரு படம். அதுல ஒரு திருநெல்​வேலி அண்​ணாச்சி கேரக்​டர் இருக்​கு.

காமெடி​யும் இருக்​கு, கண்​ணீர் வர்ற மாதிரி சீனும் இருக்​கு. உங்க சீரியல் எல்​லாம் பார்த்​திருக்​கேன். உங்​களுக்கு காமெடி​யும் வருது, சோக​மும் வருது, சென்​டிமென்ட்​டா​வும் பண்​றீங்க. அதனால இதுல அந்த அண்​ணாச்சி கதா​பாத்​திரத்தை நீங்​க​தான் பண்​ணணும்” என்​றார். நான் ‘`சரி'’ என்​றேன்.

அப்​போது உள்ளே இருந்து பிர​காஷ் ராஜ் மெது​வாக, காமெடி​யாக, நட்​போடு எட்​டிப்​பார்த்​தார். ``நான் வணக்​கம் சார்” என்​றேன். “இந்த சார் எல்​லாம் வேண்​டாம், சும்மா ஜாலியா பேசுவோம்” என்​றார்.

பிறகு அடுத்த நொடியே பல நாள் பழகிய​வர் போல பேச ஆரம்​பித்து விட்​டார். ‘அழகிய தீயே’ படத்​தில் மளி​கைக்​கடை அண்​ணாச்சி கதா​பாத்​திரம் பண்​ணினேன்.

அதில் பிரசன்​னா, குமர​வேல், டிஸ்கோ சாந்​தி​யின் தம்பி ஜெய​வர்​மா, பாலான்னு ஒரு பையன்​... இப்​படி எல்​லோரும் ஜாலி​யாக நடித்​தோம். அந்​தப் படத்​துக்கு விசு என்ற ஒளிப்​ப​தி​வாளர் பணி​யாற்​றி​னார்.

படத்​தில் ஜெய​வர்மா இறந்து போகிற மாதிரி காட்​சி. “அந்த காட்​சியை எடுக்​கும்​போது எனக்கு முதல்​லயே சொல்​லிடுங்க” என்று இயக்​குநரிடம் சொல்லி விட்​டேன். அதே போல் சொன்​னார்​கள். நான் முந்​தைய நாளி​லேயே அந்த மூடுக்கு சென்று விட்​டேன். சூர்யா மருத்​து​வ​மனை​யில் படப்​பிடிப்​பு.

எனக்கு அந்த காட்​சி​யில் டயலாக் இல்​லை. நான் ராதாமோகன் சார்ட்ட போய், “நான் ரெண்டு டயலாக் பேசிக்​கலா​மா?” என்று கேட்​டேன். அவர் நான் கண்​ணீரோடு நிற்​பதை பார்த்​து​விட்​டு, “தா​ராளமா பேசுங்க” என்​றார்.

நான் அரு​கில் போய் பார்த்​து​விட்டு அழுது​கொண்​டே, “ஏல ஐயா, பார்த்​துப் பார்த்து உடம்பை ஏத்​துனது பாடை​யில போறதுக்​கால?’ என்று ஒரு வசனம் பேசினேன். ஒளிப்​ப​தி​வாளர் விசு, கண்​ணைத் துடைத்​துக்​கொண்​டு, ‘`இதை என்​னால ஷூட் பண்ண முடி​யாது, வேற யாராவது பண்​ணுங்க” என்று போய்​விட்​டார்.

அவருடைய அசிஸ்​டன்ட்​டு​தான் அதை எடுத்​தார். ராதா மோகன் சாரும் அந்த காட்சி எடுக்​கும் போது கண்​ணீர் விட்டு அழு​தார். பிர​காஷ் ராஜ் படம் பார்த்​து​விட்டு அவ்​வளவு பாராட்​டி​னார். அந்​தப் படத்​தில் எனக்கு மிகப்​பெரிய பேர் கிடைத்​தது.

நான் அதில் பேசிய திருநெல்​வேலி பேச்சு வழக்கை பார்த்து விட்​டு, “அண்​ணாச்​சி, திருநெல்​வேலில உங்​களுக்கு எந்த பக்​கம்?” என்று பலர் என்னிடம் கேட்​டிருக்​கிறார்​கள்.

பிறகு 2006-ம் ஆண்டு ‘மொழி’ திரைப்​படம். ராதா மோகன் சார் எப்​போதும் அந்த கதா​பாத்​திரத்தை தெளி​வாக ஆரம்​பத்​திலிருந்து முடிவு வரை சொல்​லி, அதை நம் மனதுக்​குள் ஏற்​றி​விடு​வார். அப்​படித்​தான் `மொழி' படத்​தின் புரொஃபஸர் ஞானபிர​காசம் கதா​பாத்​திரம்.

“அதுக்கு கையை இப்​படி வச்​சுக்​கலாம், எந்த நேர​மும் ஒரே சிந்​தனை​யிலேயே இருக்​கிறவர், பையன் இறந்து போனதுல இருந்து அவர் மனரீ​தி​யாக ஸ்டக் ஆயிட்​டார். பழைய புஸ்​தகங்​களா படித்​துக்​கொண்டு இருப்​பார், நிறைய இங்​கிலீஷ் பேசு​வார்” என்று முதலிலேயே சொல்​லி​விட்​டார்.

அதில் பிருத்​வி​ராஜ், பிர​காஷ்​ராஜ், ஜோதி​கா,பிரம்​மானந்​தம் போன்​றோருடன் நடித்​தேன். வழக்​க​மாக பிரம்​மானந்​தம் ஐயா​வுக்கு நான்​தான் தமிழில் டப்​பிங் பேசுவேன். இந்​தப் படத்​தில், குமர​வேல் பேசி​னார்.

‘மொழி’ படத்​தில் என் கதா​பாத்​திரம் வரும்​போது திரையரங்​கில் ரசிகர்​கள் அப்​படி ரசித்​தார்​கள். அந்த படத்​துக்​காக இரவு முழு​வதும் தூங்​காமல் அப்​படியே படப்​பிடிப்​புக்கு போவேன். தூக்​கக் கலக்​க​மும், கண்​ணில் டயர்ட்​னஸும் அந்த பிரமை​யும் இருக்க வேண்​டும் என்​ப​தற்​காக அப்​படி நடித்​தேன்.

அந்​தப் படத்​தின் புரொஜெக் ஷன் போடும்​போது கலைஞர் அப்​பா, வைர​முத்து சார் எல்​லாரும் வந்து பார்த்​திருக் கிறார்​கள். பார்த்​தவுடன் ராதாமோகன் சார் வெளி​யில் வந்​து, ‘ஐயா படம் எப்​படி?’ என்​றதும் கலைஞர் அப்பா ‘கா​வி​யம்’ என்​றிருக்​கிறார்​.

``அந்த பேராசிரியரா நடிச்​சிருக்​கிற பையன்​... முத்​துப்​பேட்டை சோமண்​ணன் மகன்'’ என்று கலைஞர் ஐயா சொல்லி இருக்​கிறார். பிறகு ராதாமோகன் சார், எனக்கு போன் பண்​ணி, ‘`அப்​பாவை கலைஞர் ஐயா சொல்​றாரே?” என்று ஆச்​சரிய​மாகக் கேட்​டார்.

``அப்பா பெரிய நிலக்​கிழார். கலைஞர் ஐயா, அப்​பாவை அண்​ணன் என்​று​தான் கூப்​பிடு​வாங்க” என்​றேன். “அப்​படி​யா? அப்பா நாடக நடிகர் என நான் நினைத்​தேன்” என்​றார். இந்​தப் படத்​துக்​காக தமிழக அரசின் 2007-ம் ஆண்​டுக்​கான சிறந்த குணச்​சித்​திர நடிகர் விருது, எனக்கு கிடைத்​தது.

அதை கலைஞர் அப்பா கையால் வாங்​கினேன். ‘மொழி’ படத்​தில் எனக்​குப் பெரிய பெயர் கிடைத்​ததற்கு காரணம், இயக்​குநர் ராதா மோகன், தயாரிப்​பாளர் பிர​காஷ் ராஜ், உடன் நடித்த நடிகர்​கள், அந்த தொழில்​நுட்​ப கலைஞர்​கள்​, ஒளிப்​ப​தி​வாளர்​ விசு, வசனம்​ எழு​தி​ய விஜி... இவர்​கள்​ எல்​லோரும்​தான்​.

(திங்​கள்​ தோறும்​ பேசுவோம்​)

SCROLL FOR NEXT