இப்போது மாபெரும் வெற்றி பெற்று தமிழக முதல்வராகி இருக்கிற அன்பு தம்பி விஜய்-யை அவர் பள்ளி படிக்கிற காலங்களிலேயே எனக்கு தெரியும். அவருடைய தாய்மாமா எஸ்.என்.சுரேந்தர் என் நண்பர். சுரேந்தரின் சகோதரர் காலஞ்சென்ற சுந்தரும் நானும் அண்ணன் தம்பி போல பழகி வந்தோம்.
இன்றும் எஸ்.என்.சுரேந்தருடன் அதே நெருக்கத்தில்தான் இருக்கிறேன். விஜய்யின் அம்மாவான ஷோபாவை, அக்கா என்று அழைக்கிற அளவுக்கும் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை மாமா என்றழைக்கற அளவுக்கும் நான் அவர்களுக்கு நெருக்கமானவன்.
விஜய்யின் சித்தி ஷீலாவை, அக்கா என்றழைக்கும் அளவுக்கும் அவர் கணவர் சிவாவை மாமா என்று அழைக்கும் அளவுக்கும் குடும்பத்தில் ஒருவனாகப் பழகியவன். இப்போதும் அப்படித்தான் பழகுகிறேன்.
அடிக்கடி அவர்கள் வீட்டுக்குப் போவேன். சுரேந்தரும் என் வீட்டுக்கு வருவார். ஷோபா அக்காவின் அப்பா நீலகண்டனை நானும் அப்பா என்றுதான் அழைப்பேன். எஸ்.ஏ.சந்திரசேகர் மாமாவின் பல படங்களில் நான் டப்பிங் பேசியிருக்கிறேன். அவரை எப்போதும் சந்திக்க எனக்கு உரிமை உண்டு.
விஜய் நடிப்பில் மஜித் இயக்கிய ‘தமிழன்’ படத்தில் நான் கண்டக்டராக நடித்தேன். அப்போதே விஜய் பெரிய நடிகராகிவிட்டார். அதன் படப்பிடிப்பில் அவரிடம் சென்று என்னை ஞாபகம் இருக்கா?” என்று கேட்டேன். “பார்த்திருக்கேன், என்றார். பிறகு நான் ஞாபகப்படுத்திச் சொன்னதும் ஆமா என்று கேட்டுக்கொண்டார்.
பிறகு இடையில் சில காலம் இடைவெளி விழுந்துவிட்டது. அப்போது ஒரு நாள் எஸ்.ஏ.சந்திரசேகர் மாமாவை பார்க்கச் சென்றபோது, “என்ன ஆளே காணோம். கண்டக்டர் ஆயிட்டியா?” என்று கிண்டலாக கேட்டார். “இல்லையே, ஏன்?” என்று கேட்டேன்.
“தமிழன் படத்துல கண்டக்டர் மாதிரி அப்படியே இயல்பா பண்ணியிருந்தியே, அதனால கேட்டேன்” என்றார். நான் சிரித்துக்கொண்டேன். பிறகு அதிக படங்களில் நான் நடிக்கவில்லை. அடுத்து, திருப்பாச்சி, சிவகாசி, வேலாயுதம், காவலன் என பல படங்களில் விஜய்யுடன் நடித்திருக்கிறேன். அப்போதெல்லாம் ரொம்ப ஜாலியாக எல்லோரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்போம். எல்லோரிடமும் அன்பாக, “சாப்பிட்டீங்களா?” என்று விசாரிப்பார்.
ஒரு முறை டப்பிங் தியேட்டரில், அவர் உள்ளே பேசிக்கொண்டிருக்கார் என்றனர். நான் வேறொரு படத்துக்கு டப்பிங் பேசிக்கொண்டிருந்தேன். அவர் வெளியே வந்து,
என்னைப் பார்த்ததும் இரண்டு கையையும் விரித்து “எப்படியிருக்கீங்க?” என்று கட்டிப் பிடித்துக்கொண்டார்.
இப்போது சில ஆண்டுகளாக அவரை நேரில் பார்க்கவில்லை. தூரத்தில் இருந்து பார்த்து ரசித்துக்கொண்டுதான் இருக்கிறேன். பெரிய நட்சத்திரமாக அவர் உயர்ந்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.
அழகாக பாடக்கூடிய, அற்புதமாக நடனமாடக் கூடிய, அதிரடியான சண்டைக்காட்சிகளில் வீரம் காட்டக் கூடிய பிரமாதமாக நடிக்கக்கூடிய திறமையான பிள்ளை அவர். சங்கீத ஞானம் அவருக்கு வந்ததில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. அவருடைய மாமா சுரேந்தர், அம்மா ஷோபாக்கா ஆகியோர் நன்றாக பாடுபவர்கள் என்பதால் அதில் ஆச்சரியமில்லை.
இப்போது முதல்வராகி மக்கள் சேவை செய்ய இருக்கிறார். உலகெங்கும் இருக்கக் கூடிய அவருடைய ரசிகர்களின் அன்பும் அரவணைப்பும் இந்தளவுக்கு உயர்த்தி இருக்கிறது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அவருடைய கடுமையான உழைப்பும், அவர் ஏற்றுக்கொள்கிற கேரக்டர்களில் காட்டுகிற ஈடுபாடும், உடன் நடிப்பவர்களை மட்டுமல்லாமல், எல்லோரையும் மதிக்கிற பண்பும் சேர்ந்துதான் அவரை இந்தளவுக்கு உயர்த்தி இருக்கிறது என நான் நினைக்கிறேன்.
என் குடும்பத்தில் என் மனைவி, மகன், மகள் எல்லோருமே அவருடைய ரசிகர்கள்தான். அவர் கட்சி தொடங்கி, 2 ஆண்டுகளுக்குள் ஆட்சியை பிடிக்கிற அளவுக்கு மக்களிடம் அன்பை சம்பாதித்திருக்கிறார் என்பதை நினைக்கும்போது எனக்குள் மகிழ்ச்சி நிலவுகிறது.
ஆண்டவன் அவருக்கு நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் அற்புதமான ஆட்சியை தரக்கூடிய திறமையையும் தர வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன். வாழ்த்துகள், தமிழக முதல்வர் விஜய் அவர்களே!