நான் பிறந்தது 1957-ம் ஆண்டு. இப்போது எனக்கு 68 வயது முடிவடைந்து விட்டது. எனக்கு அடுத்ததாக 1960-ல் தம்பி பிறந்தான். சிறுவயதில் இருந்தே நாங்கள் நண்பர்களை போல பழகுவோம். ஒன்றாக விளையாடுவோம். குழந்தைகளுக்கே உண்டான சண்டைகள் செய்து கொள்வது, பிறகு சேர்ந்து கொள்வது என இருப்போம்.
அவனுக்குப்பிறகு 2 தம்பிகள் பிறந்தனர். ஒரு தம்பி பிறந்த 3 வது நாளில் இறந்துபோனார். இன்னொரு தம்பி அவருடைய 10 வயதில் உடல் நலமில்லாமல் இறந்து விட்டார். என் உடன் பிறந்தோர் எத்தனை பேர் என்றால், மூத்த அக்கா, ஹேமமாலினி, இரண்டாவது சகோதரி தாரா சந்துரு, (மும்பையில் இருக்கிறார்.) மூன்றாவது நான், நான்காவது என்னுடைய தம்பி, இறந்த இருவரையும் சேர்த்து ஆறு பேர்.
ஏதோ ஒரு நாவலை படித்துவிட்டு தம்பிக்கு கிரிதரன் என்று பெயர் வைத்தார்கள் என் பெற்றோர். அவன் நல்ல சுருட்டைமுடியுடன் பூசிய உடலுடன் இருப்பான். நான் மெலிந்த உருவம்தான். நான் படிப்பில் சிறந்த மாணவன் இல்லை. அவன் நன்றாகப் படிப்பான்.
சின்ன வயதில் அவனை யாராவது தூக்கி வைத்திருந்தால், அவர்கள் முதுகில் தாளம் போடுவான். அப்போது யாரோ, இவனுக்கு மிருதங்கம் வாசிக்க கற்றுக்கொடுத்தால் நன்றாக வருவான் என்று சொன்னார்கள்.
அதனால் அவனுக்கு ஓர் ஆசிரியரை வைத்து கற்றுக் கொடுத்தார்கள். பிரமாதமாக மிருதங்கம் வாசிப்பான். 10 வயதிலேயே அவனை ஒரு கச்சேரியில் வாசிக்க வைத்து, பாலநந்தி என்று பட்டம் கொடுத்தார்கள். எந்தளவுக்குத் திறமையாக மிருதங்கம் வாசிப்பானோ, அந்த அளவுக்கு படிப்பிலும் கெட்டிக்காரன். நாங்கள் ஒன்றாக வளர்ந்தோம்.
எனக்கும் என் சகோதரிகள் இருவருக்கும் வாய்ப்பாட்டு சொல்லிக் கொடுத்தார்கள். சிக்கல் என்ற ஊரில் இருந்து கந்தசாமி என்று ஓர் ஆசிரியரும் திருமெய்ஞானம் என்ற ஊரில் இருந்து நாராயணசாமி என்ற ஆசிரியரும் வந்து பாட்டு சொல்லிக் கொடுத்தார்கள். அப்படி வளர்ந்தோம். பிறகு அங்கிருந்து சென்னை வந்ததை நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.
சென்னையில் கோபாலபுரம் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் படித்தோம். அவன் ஒரு வகுப்பில் கூட பெயில் ஆனதில்லை. (நான் எஸ்.எஸ்.எல்.சியில் 3 முறை பெயில் ஆகி தேர்வானேன் என்பதை தயவு செய்து என்னோடு படித்த நண்பர்கள் யாரும் வெளியே சொல்ல வேண்டாம் சிறுவயதிலேயே நடிப்பு ஆசை வந்து விட்டதால் படிப்பில் என் கவனம் இல்லை.
இதில் பெரிய கூத்து என்னவென்றால் நான் டிகிரி படிக்கும் போது அவனும் டிகிரி படித்தான். நான் பச்சையப்பன் கல்லூரியிலும் என் தம்பி புதுக்கல்லூரியிலும் படித்தோம். பிறகு அவன் அரசு வேலைக்கான தேர்வுகளை எழுதினான்.
அப்போது எம்.எல்.ஏ ஹாஸ்டலில் டெலிபோன் ஆபரேட்டர் பணியிடம் காலியாக இருக்கிறது என்று தெரிந்து அவன் என் தந்தையாரிடம் சொல்ல, அந்த வேலைக்காக என் தந்தை அப்போதைய அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியனை பார்க்க அவனை அழைத்துச்சென்றார்.
அம்மா சத்யபாமாவுடன் நானும் தம்பி கிரிதரனும்.
நானும் போனேன். அமைச்சரய்யா என் அப்பாவுக்கு நல்ல பழக்கம். காரில் ஏறப்போனவர் அப்பாவை பார்த்ததும் “என்னண்ணே நீங்க வந்திருக்கீங்க?” என்று கேட்டார். “இல்லை... பையன் வேலை விஷயமா உங்களை பார்க்க வந்தேன்” என்று சொன்னார் அப்பா! அமைச்சர் என்ன என்று கேட்டுக்கொண்டு பிறகு, “நீங்க போங்கண்ணே... நான் பார்த்துக்கறேன்” என்றார்.
மறுநாளே வேலைக்கான ஆர்டர் வந்து விட்டது!/தம்பி வேலைக்கு சேர்ந்து விட்டான்! நானும் தள்ளாடி தடுமாறி டிகிரி முடித்து ஒரு பற்பசை நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டேன். இதற்கிடையே ஓரிரு வருடங்களில் நான் அந்த வேலையையும் விட்டு விட்டு சினிமாத்துறைக்கு வந்து விட்டேன்.
பிறகு தம்பி அரசு கொறடாவிடம் பி.ஏ.வாக சேர்ந்தான். மிகத்திறமையான நிர்வாகி அவன். அதனால் அவர் அனைத்து பொறுப்புகளையும் கிரி... கிரி என்று அவனிடமே ஒப்படைப்பார். பிறகு, ‘அசிஸ்டென்ட் செக் ஷன் ஆபிஸர்’ ஆனான்.
அவனுக்கு திருமணம் ஆனது. சவுந்தர்யா, கிருத்திகா என இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தார்கள். அவன் வாழ்க்கை சுகமாக போய்க்கொண்டிருக்கும் போது, எப்படியோ மது குடிக்க பழகி விட்டான். அதனால் மிருதங்கம் வாசிப்பதை விட்டான். இந்த தீய பழக்கத்தால் அவன் உடல் நிலை பாதிக்கப்பட்டது.
“இரண்டு பெண் குழந்தைகள் இருக்கு, குடியை விட்டு விடு” என்று அறிவுரை சொல்வேன். “சரி, இனி விட்டு விடுகிறேன்”. என்பான். பிறகு கால மாற்றத்தால் சின்னப்போரூர் வீட்டை விற்று பாகம் பிரித்த பின் நான் விருகம்பாக்கம் போய் விட்டேன். அவன் போரூர் அருகே உள்ள காரம்பாக்கம் போனான்.
பிறகு அவனை எப்போதாவதுதான் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஒரு கட்டத்தில் மதுவை விடவே முடியாத சூழ்நிலைக்கு சென்று விட்டான். நான், என் மனைவி, அவன் மனைவி ஞானசவுந்தரி, (ஜானு என்று அழைப்போம்) குழந்தைகள் என எல்லோரும் சொல்லிப்பார்த்தோம்! எவ்வளவு முயன்றும் அவனால் அப்பழக்கத்தை விட முடியவில்லை.
இதை விதி என்று மனதை தேற்றிக்கொள்வதை தவிர வேறு வழியில்லை! அந்த ஒன்றைத் தவிர்த்து பார்த்தால் என் தம்பி என்னிலும் சிறந்தவன், சிறந்த அறிவாளி. பிறகு, ‘8 தோட்டாக்கள்’ பட ஷூட்டிங்கில் நான் இருந்தபோது, ஹேமா அக்கா போன் செய்தார். அவனை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகச் சொன்னார்.
மருத்துவர்கள், ‘இனி மதுவை தொடவே கூடாது’ என்று சொன்னார்கள். அவன் டிஸ்சார்ஜ் ஆகி மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்த இரண்டாவது நாள், அதாவது, 2016-ம் ஆண்டு செப்.27 ம் தேதி இரவு சுமார் 10.30 மணியளவில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த என்னை என் மனைவி அழுதவாறே எழுப்பினார். “கிரி மாமா, கிரி மாமா” என்று திக்கித்திணறி பேச்சு வராமல் தவித்தாள்.
நான் எழுந்து உட்கார்ந்து, “என்ன... இறந்துட்டானா?” என்று கேட்டேன். எனக்கு வேதனை இருந்தாலும் அதிர்ச்சி இல்லை! ஏனென்றால் முடிவு இதுதானே? மரணம் இயற்கை. அதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். (மற்றவர்கள் மரணம் நமக்கு வேதனை, நம்முடைய மரணம் இப்பிறப்பிலிருந்து விடுதலை.) மறுநாள் போரூர் மின் மயானத்தில் தகனம் செய்து விட்டு வந்தேன்.
துக்கம் தாங்க முடியாமல், தம்பி பற்றி இரண்டு கவிதைகள் எழுதினேன். ‘உப்பை நீ குறைத்திருந்தால் உதிரக்கொதிப்பு குறைந்திருக்கும் தப்பை நீ தவிர்த்திருந்தால் தலையெழுத்து மாறியிருக்கும் தப்பையே துணையாய்க்கொண்டு தறிகெட்டுப்போனாய் நீ.
அரசு வேலை கிட்டியதென அகலக்கால் வைத்திட்டாய், அதனாலே அமைதி கெட்டு அஸ்தியாயும் கரைந்திட்டாய் மரணத்தில்தான் அடங்கியதோ உன் மதுவருந்தும் தாகம் இப்பிறப்பில் செய்திட்ட இச்செயல் போல் ஏதுமின்றி வரும் பிறப்பில் வறியோர்க்களித்து வள்ளலாய் வாழ்ந்திடடா..!’ என்று எழுதினேன்.
அடுத்து, ‘முன்னே வந்த இரண்டு இறப்பும் இறைவனின் சதி. பின்னே வந்த உனது இறப்போ நீயே வகுத்த விதி. வகுப்பெதிலும் நீ தோற்கவில்லை. வாழ்க்கையில் நீ ஜெயிக்கவில்லை.. மனைவி மக்களை மதிக்காமல் மதுவையே மதித்ததால் மரணவாயிலை மிதித்தாய்.
எனக்கும் ஓர் நாள் உண்டென்றாலும் என் மனம் இன்று தவிக்குதடா. ஊரில் ஆயிரம் தம்பிகள் இருப்பினும் உடன்பிறந்தோன் கூடாதென்பது என் விதியோ?’ என்றும் எழுதினேன். ‘ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மண் மீதே’ என்பது எத்தனை உண்மை! இனி எப்பிறப்பில் நாங்கள் ஒரு தாய்க்கு பிள்ளைகளாக பிறப்போம் என்று தெரியவில்லை.
(திங்கள்தோறும் பேசுவோம்)