‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இதன்மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார் ரிஷிகாந்த். ‘சிறை’, ‘யூத்’ படங்களில் நடித்துள்ள அனிஷ்மா அனில்குமார் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இவர்களுடன் சேத்தன், ஏ.வெங்கடேஷ், பக்ஸ், அப்துல் லீ, ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுப்ரியா, சுமித்ரா தேவி எல்., வர்ஷினி கார்மேகம், கார்த்திகேயன், வேலன், கௌஷிக் கபிலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஆகஸ்ட் 21-ல் வெளியாகும் இப்படம் குறித்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி கூறுகையில், “இந்தக் கதையை முதன்முதலாகக் கேட்டபோதே நாங்கள் சிரித்து ரசித்தோம். திரையில் இந்தக் கதையை ரசிகர்கள் பார்த்தால் எப்படி மகிழ்வார்கள் என்பதும் புரிந்தது.
ஒரு திரைப்பட ரசிகராக நாம் விரும்பும் நகைச்சுவை, உணர்வுகள், நம்மைச் சுற்றியிருக்கும் கதாபாத்திரங்கள், முழுமையான பொழுதுபோக்கு என அனைத்தும் ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் உண்டு. இயக்குநர் ராஜா கருப்பசாமி அந்த உணர்வுகளை அழகாக திரையில் கொண்டு வந்துள்ளார்” என்று கூறியுள்ளார்.
இயக்குநர் ராஜா கருப்பசாமி கூறுகையில், “இந்தப் படம் முடிந்த பிறகும் ரசிகர்கள் இந்தக் கதாபாத்திரங்களைப் பற்றி பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் திரையரங்குகளை விட்டு வெளியேற வேண்டும் என்பதே என் மிகப் பெரிய ஆசை” என்றார்.