பிரதீப் ரங்கநாதனுக்கு நாயகியாக நடிக்க மீனாட்சி சவுத்ரியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
‘டியூட்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எல்.ஐ.கே’ படத்தில் நடித்து முடித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். இப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு, தற்போது அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என தெரிகிறது. இப்படத்தினைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் அவரே இயக்கி நடிக்க முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தினை பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது. சயின்ஸ் பிக்சன் பாணியில் இப்படத்தினை ஆக்ஷன் கலந்து உருவாக்கவுள்ளார் பிரதீப் ரங்கநாதன். இதன் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இதில் பிரதீப் ரங்கநாதனுக்கு நாயகியாக நடிக்க மீனாட்சி சவுத்ரியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
விரைவில் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என தெரிகிறது. ‘லவ் டுடே’ படத்துக்குப் பிறகு பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் படம் என்பதால் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதனை ஒரே கட்டமாக படமாக்கி முடித்து, அடுத்தாண்டு இறுதியில் வெளியிட ஏஜிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.