தமிழ் சினிமா

‘மாஸ்க்’ விமர்சனம்: கவினின் ‘ஹெய்ஸ்ட் த்ரில்லர்’ முயற்சி எப்படி?

டெக்ஸ்டர்

கடந்த செப்டம்பர் மாதம் ‘கிஸ்’ என்ற ஃபேண்டசி த்ரில்லர் படத்தில் நடித்திருந்த கவின், உடனடியாக முற்றிலும் வேறு ஒரு களத்தில் இறங்கியிருக்கும் படம்தான் ‘மாஸ்க்’. டார்க் காமெடி, வில்லத்தன ஆண்ட்ரியா, வெற்றிமாறனின் மேற்பார்வை, எம்.ஆர்.ராதா முகமூடி என ட்ரெய்லரே இப்படத்துக்கு ஒரு நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா என்று பார்க்கலாம்.

சொந்தமாக டிடெக்டிவ் ஏஜென்சி வைத்திருப்பவர் வேலு (கவின்). வாடிக்கையாளர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் அதே நேரத்தில் முடிந்தவரையில் அவர்களை தனது பொருளாதார தேவைகளுக்கு பயன்படுத்திக் கொண்டு பணம் ஒன்றே குறிக்கோளாக வாழ்கிறார். இன்னொரு பக்கம் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் பெண் குழந்தைகளை காப்பாற்றி படிக்க வைத்து ஆளாக்கும் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார் பூமி (ஆண்ட்ரியா). அதே நேரம் இவருக்கு வேறு ஒரு முகமும் இருக்கிறது.

இவர்கள் இருவரின் பாதைகளும் ஒரு மிகப்பெரிய கொள்ளை சம்பவத்தின் மூலம் குறுக்கிடுகின்றன. கொள்ளை போன பணத்தை எப்படியாவது மீட்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர் இருவரும். கொள்ளையடிக்கப்பட்ட பணம் மீட்கப்பட்டதா? கொள்ளைக்கு காரணம் யார்? உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் சொல்கிறது ‘மாஸ்க்’

நெல்சனின் குரலில் பயணிக்கத் தொடங்கும் படம் அவரது பட பாணியிலேயே செல்கிறது. கதாபாத்திரங்களின் பண்புகள், அவர்களின் சுயநலமான நோக்கங்கள் ஆகியவற்றை ஆடியன்ஸுக்கு புரியவைப்பதற்காக வைக்கப்பட்ட காட்சிகள் நிமிர்ந்து உட்கார வைக்கும் ரகம். குறிப்பாக கவின், ஆண்ட்ரியா கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்ட விதம் சிறப்பு.

இடைவேளையின் போது நடக்கும் அந்த கொள்ளைக் காட்சி வரையுமே நல்ல விறுவிறுப்புடன் செல்கிறது திரைக்கதை. அந்த கொள்ளை சம்பவம், அதில் வந்து கவின் மாட்டிக் கொள்வது, அதன் பிறகு கவினின் காதலியின் வீட்டில் நடப்பவை என தொடர்ந்து ஒரு 20 நிமிடத்துக்கு எழுதப்பட்ட காட்சிகள் ரகளை.

இடைவேளைக்குப் பிறகு ஆண்ட்ரியா - கவின் இடையே ஒரு கேட் அண்ட் மவுஸ் ஆட்டமாக சென்றிருக்க வேண்டிய திரைக்கதை, எங்கெங்கோ அலைந்து திரிகிறது. கவின் ஆண்ட்ரியாவை ஏமாற்றுவதும், பதிலும் அவர் இவரை மிரட்டுவதுமாக காட்சிகள் ரிப்பீட் ஆகிக் கொண்டே இருப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. டார்க் காமெடி் பல இடங்களில் கைகொடுத்தாலும் சில இடங்களில் வலிந்து திணிக்கப்பட்ட உணர்வு எழுகிறது.

சுயநலமே பிரதானமான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று, முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் கவின். ஒவ்வொரு படத்திலும் நடிப்பில் மிளிர்கிறார். அவருடைய உடல்மொழி, வசன உச்சரிப்புகளில் மேலும் மெருகேறியிருக்கிறார். படத்தின் ஹீரோவுக்கு நிகரான மற்றொரு கதாபாத்திரம் ஆண்ட்ரியாவுடையது. அதை சிறப்பாக செய்து அசத்தி இருக்கிறார். டயலாக் டெலிவரி பல இடங்களில் ‘வடசென்னை’ சந்திராவை நினைவூட்டினாலும் இந்த படம் நிச்சயம் அவரது பெயர் சொல்லும் ஒன்றாக இருக்கும். பவன், சார்லி, ருஹானி சர்மா, ரமேஷ் திலக், கல்லூரி வினோ என அனைவருமே தங்கள் பங்களிப்பை நிறைவாக செய்துள்ளனர்.

தொழில்நுட்ப ரீதியாக, ஆர்.டி. ராஜசேகரின் ஒளிப்பதிவு படத்திற்குப் பெரும் பலம். அவருடைய ஷாட் ஃபிரேமிங் மற்றும் லைட்டிங், குறிப்பாக இரவு நேரக் காட்சிகளைப் பதிவு செய்த விதம் அட்டகாசம். ஜி.வி. பிரகாஷ் குமாரின் பின்னணி இசை, திரில்லர் காட்சிகளின் பதற்றத்தை ரசிகர்களுக்குக் கடத்த உதவியுள்ளது. ‘கண்ணுமுழி’ பாடல் வைரல் மெட்டிரீயல்.

எடிட்டிங்கில் கொஞ்சம் அல்ல, நிறையவே கவனம் செலுத்தி இருக்க வேண்டும். காட்சிகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பே இல்லாத வகையில் சடாரென கட் ஆகின்றன. படம் முழுக்க இது ஒரு குறையாக உறுத்திக் கொண்டே இருக்கிறது. க்ளைமாக்ஸுக்கு முன்னால் வரும் பிளாஷ்பேக் ஏற்றுக் கொள்ளும்படி இருந்தாலும் ஒருகட்டத்துக்கு மேல் பொறுமையை சோதிக்கிறது. அதை இன்னும் ஷார்ப் ஆக சொல்லி இருக்கலாம். எம்.ஆர்.ராதா முகமூடிக்கான காரணம் என்ன என்பதற்கு சரியான பதில் படத்தில் இல்லை, அது வெறுமனே ‘மனி ஹெய்ஸ்ட்’ சல்வடோர் டாலி முகமூடி பாணியில் வைக்கப்பட்டதாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.

சாதாரண மனிதனின் முகமூடிக்குள் ஒளிந்திருக்கும் ஆழமான நோக்கத்தை, ஒரு பரபரப்பான திரில்லர் பாணியில் சொல்ல முயன்றிருக்கும் 'மாஸ்க்', திரைக்கதையில் ஆங்காங்கே வரும் வேகமின்மை மற்றும் எடிட்டிங் குறைகளை சரி செய்திருந்தால் ‘சூது கவ்வும்’ போன்ற ஒரு சிறந்த டார்க் காமெடி த்ரில்லராக வந்திருக்கும்.

SCROLL FOR NEXT