மாரி செல்வராஜ்
செப்டம்பரில் தனுஷ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். மேலும், அந்தப் படத்தின் மையக்கரு குறித்தும் அவர் விவரித்துள்ளார்.
‘கர்ணன்’ படத்துக்குப் பிறகு மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். இதனை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது தெரியாமல் இருந்தது. இதன் முதற்கட்டப் பணிகள் மட்டும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தனுஷ் படம் செப்டம்பரில் தொடங்கும் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். தனுஷ் படம் தொடர்பாக அவர் கூறும்போது, “பல ஆண்டுகளுக்கு முன்பு எனது படங்களுக்கு ஒரு தொடக்கப் புள்ளி அமைந்தது. அதுவே ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ மற்றும் ‘பைசன்’ ஆகிய படங்களுக்கு அதுவே வழிவகுத்தது.
அதன் தொடக்கத்தை, அதன் வேரை கண்டுபிடித்து அதை முழுவதுமாக அழிக்க முயன்றால் என்ன செய்வது? அதுவே தனுஷ் படக் கதையின் மையக்கரு. இந்தப் படத்துக்கு மிகப் பெரிய உழைப்பு தேவைப்படுகிறது. என்னிடம் தனுஷ் பேசும்போது, ‘நமது இருவரின் திரையுலக வாழ்விலும் மிகப் பெரிய படமாக இருக்க வேண்டும்’ என்று கூறினார். அந்தப் படம் ஃபேன்டஸி, வரலாறு மற்றும் அரசியல் என அனைத்து கலந்த படமாக இருக்கும். இதன் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கும்” என்று தெரிவித்துள்ளார் மாரி செல்வராஜ்.
ராஜ்குமார் பெரியசாமி படத்தை முடித்துவிட்டு, மாரி செல்வராஜ் படத்தை தனுஷ் தொடங்க திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.