சூரி நடிக்கவுள்ள புதிய படத்தில் நாயகியாக நடிக்க மமிதா பைஜுவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
ரவிக்குமார் இயக்கவுள்ள அடுத்த படத்தில் சூரி நாயகனாக நடிக்கவுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தில் நாயகியாக நடிக்க மமிதா பைஜுவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. இதன் படப்பிடிப்பு தேதிகள் முடிவானவுடன், ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என தெரிகிறது. 2015-ம் ஆண்டு சென்னையில் வந்த வெள்ளத்தை பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் கதையினை உருவாக்கியுள்ளார் ரவிக்குமார்.
இதில் சூரியுடன் நடிக்கும் இதர நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் முன்பே, இதன் ஓடிடி உரிமை விற்கப்பட்டுவிட்டது. இதனால் இந்தப் படத்தினை பெரும் பொருட்செலவில் தயாரிக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
தற்போது ‘மண்டாடி’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூரி. அதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. அதனை முடித்துவிட்டு ரவிக்குமார் படத்தின் பணிகளைத் தொடங்க முடிவு செய்திருக்கிறார்.