மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மக்கள் காவலன்’. சந்தோஷ் குமார் எழுதி, இயக்கியுள்ளார். வாகை சந்திரசேகர், ஏ.வெங்கடேஷ், ஆர்.கே. விஜய் முருகன், சண்முகம் முத்துசாமி, சபுமோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீபாதா, ஜென்சன் திவாகர், லல்லு, ஜெமினி மணி, ரகு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரதீபன் செல்வரத்னம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். பிர்லா ஸ்டூடியோஸ் - நீலம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் டிச.4-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“கண்ணியத்துடன் வாழ விரும்பும் சாதாரண மனிதனின் கதையைப் பேசும் படம் இது. ஆனால், ஊழல் நிறைந்த ஓர் அமைப்பு, அவரை சரணடைவது அல்லது எதிர்த்துப் போராடுவது என்ற தேர்வுகளுக்குள் உந்தித் தள்ளுகிறது. ஒரு தனி மனிதனின் உயிர் வாழ்வதற்கான போராட்டமாகத் தொடங்கும் இப்படம், மிகப்பெரிய பரிமாணத்தை எட்டுகிறது. இதனால் அவர் ஒருபோதும் விரும்பாத ஒரு தலைவராக மாற வேண்டிய கட்டாய சூழல் உருவாகிறது. பிறகு என்ன நடக்கிறது என்று கதை செல்லும்.
உலகம் விதிக்கும் எல்லைகளுக்கு அப்பால் கனவு காணும் துணிச்சலையும். அந்த எல்லைகள் முக்கியத்துவமற்றதாக மாறும் வரை தொடர்ந்து முன்னேறும் மன உறுதியையும் இத்திரைப்படம் அழுத்தமாகப் பேசுகிறது” என படக்குழு தெரிவித்துள்ளது.