நடிகர் விமல்
கோப்புப் படம்
சென்னை: தனக்கு எதிரான செக் மோசடி வழக்கில் மோசடியாக ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கக் கோரி, நடிகர் விமல் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘மன்னர் வகையறா’ படத்தின் தயாரிப்புக்காக நடிகர் விமல், பைனான்சியர் கோபி என்பவரிடமிருந்து 4 கோடியே 50 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். கடனை திருப்பிக் கொடுக்கும் வகையில் விமல் வழங்கிய காசோலை, வங்கியில் செலுத்தியபோது, விமல் வங்கிக் கணக்கில் போதுமான பணம் இல்லாததால் காசோலை திரும்பி வந்தது.
இதையடுத்து நடிகர் விமலுக்கு எதிராக பைனான்சியர் கோபி, சென்னையில் உள்ள 11-வது சிறு வழக்குகளையும் விசாரிக்கும் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், விமலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். காசோலை தொகையை கோபிக்கு திருப்பிக் கொடுக்கவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில், தனக்கு எதிரான செக் மோசடி வழக்கில் குறிப்பிட்டுள்ள காசோலை விவரங்கள், உண்மை ஆவணங்களில் இல்லாதவை எனவும், மோசடியான ஆவணங்கள் தாக்கல் செய்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, கோபிக்கு எதிராக நடிகர் விமல், சென்னை சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
ஆனால், பிரதான வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டு விட்டதால், மனு விசாரணைக்கு உகந்ததல்ல என திருப்பி அனுப்பி, சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்து, தனது மனுவை எண்ணிட்டு விசாரிக்கும்படி, சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்துக்கு உத்தரவிடக் கோரி, நடிகர் விமல் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை எனக் கூறி, நடிகர் விமலின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.