தமிழ் சினிமா

பிரியங்கா மோகன் நடித்துள்ள ‘மேட் இன் கொரியா’ - ஓடிடியில் நேரடி வெளியீடு

ஸ்டார்க்கர்

பிரியங்கா மோகன் நடித்துள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் மார்ச் 12-ம் தேதி ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

ரா.கார்த்திக் இயக்கத்தில் பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகி வந்த படம் ‘மேட் இன் கொரியா’. இதன் படப்பிடிப்பு கொரியாவில் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. இப்படத்தின் இறுதிகட்டப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. தற்போது இப்படம் நேரடியாக ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

          

குழந்தைப் பருவத்தில் கேட்ட கதைகள், வகுப்பறையில் அமர்ந்திருக்கும் தருணங்கள் அல்லது வீட்டைத் தாண்டிய தொலைதூர உலகங்களில் என எதிர்பாராத இடத்தில் இருந்துதான் கனவுகள் தொடங்குகின்றன. செண்பாவுக்கும் இது விதிவிலக்கல்ல! தமிழ்நாட்டின் ஒரு சிறிய ஊரில் தனது அன்றாட வாழ்க்கையை தாண்டி, ஒருநாள் தென் கொரியாவுக்கு பயணம் செய்ய வேண்டும் என்ற கனவு செண்பாவுக்கு இருக்கிறது.

அந்த கனவு நனவாகும் வாழ்க்கைப் பயணத்தை சொல்லும் ‘மேட் இன் கொரியா’ ஃநெட்ப்ளிக்ஸ் தளத்தில் மார்ச் 12-ம் தேதி வெளியாகிறது. ரைஸ் ஈஸ்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தினை ரா.கார்த்தி எழுதி இயக்கியுள்ளார். இது செண்பா என்கிற செண்பகத்தின் கதையை சொல்கிறது. கொரிய கலாச்சாரத்தின் மீது சிறுவயது முதலே ஈர்ப்பு கொண்டவளான செண்பா அதை அனுபவித்து பார்க்க வேண்டும் என விரும்புகிறாள்.

சியோலில் எதிர்பாராத விதமாக அவளுக்கு அந்த அனுபவம் கிடைக்கிறது. ஆனால், அவள் கற்பனை செய்ததை விட யதார்த்தம் பல சவால்களை அவள் முன் நிறுத்துகிறது. அதைத்தாண்டி அவளின் சுயத்தை கண்டுபிடிக்கும் நெகிழ்ச்சியான இந்தப் பயணமே ‘மேட் இன் கொரியா’.

படம் குறித்து இயக்குநர் ரா. கார்த்திக் பகிர்ந்து கொண்டதாவது, “கொரிய மற்றும் தமிழ் கலாச்சாரங்களுக்கு இடையில் ஒரே மாதிரியாக உள்ள ஆழமான பல வரலாற்று ஒற்றுமைகள் என்னை ஈர்த்தன. அந்த ஆர்வமே என் மனதுக்கு நெருக்கமான இந்த நம்பிக்கையூட்டும் கதையை சொல்ல தூண்டியது.

மொழிகளைத் தாண்டி உலக கலாச்சாரங்களை இணைக்கும் கதைகளுக்கு ஆதரவு அளிக்கும் ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு நன்றி” என்றார். பிரியங்கா மோகன் மற்றும் ’ஸ்க்விட் கேம்’புகழ் தென் கொரிய நடிகர் பார்க் ஹை-ஜின் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும், இந்த கதை இந்தியா மற்றும் கொரியாவுக்கு இடையிலான கலாச்சாரப் பாலமாக திகழ்கிறது. இந்தப் படத்தில் தென் கொரிய நடிகர்களான பார்க் ஹை-ஜின் மற்றும் நோ ஹோ-ஜின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

SCROLL FOR NEXT