அமீர் நடிப்பில் உருவாகி வரும் ‘மாகாளி’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
மாரி செல்வராஜிடம் உதவியாளராக இருந்த எஸ்.பி. அரவிந்த் இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்தில் அமீர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன், அனிஷ்மா அனில்குமார், ஹரிஹரன், ராம், லெனின் பாரதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தை ஐங்கரன் சார்பாக கே.கருணாமூர்த்தி - நவ்வி சார்பாக திவ்யா மாரி செல்வராஜ் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் இணைந்து தயாரிக்கின்றனர்.
செப்டம்பர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. சுமார் ஒரு மாதம் நடந்து வந்த முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.
இந்த தகவலை இயக்குநர் மாரி செல்வராஜ் அவரது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் படக்குழுவினர் கேக் வெட்டும் படத்தைப் பகிர்ந்து, ‘மாகாளி’-யின் முதல்கட்ட படப்பிடிப்பு மகிழ்ச்சியுடன் நிறைவடைந்தது’ என்று தெரிவித்துள்ளார்.
‘மாகாளி’ படத்துக்கு செல்வரத்தினம் பிரதீப் ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார்.