ரெஜினா நடிக்கும் அடுத்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.
முன்னணி இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தொடர்ச்சியாக படங்களும் தயாரித்து வருகிறார். கடைசியாக கார்த்திக் சுப்பராஜ் உடன் இணைந்து ‘29’ படத்தினை தயாரித்திருந்தார். அதனைத் தொடர்ந்து புதிய படம் ஒன்றை தயாரிக்க லோகேஷ் கனகராஜ் முடிவு செய்திருக்கிறார்.
லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விஷால் வெங்கட் இயக்கவுள்ள இப்படத்தில் ரெஜினா நாயகியாக நடிக்கவுள்ளார். முழுக்க நாயகியை மையப்படுத்திய படமாக இது உருவாகிறது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்து இந்த ஆண்டிற்குள் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.
‘கூலி’ படத்துக்குப் பிறகு, அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தினை இயக்க தயாராகி வருகிறார் லோகேஷ் கனகராஜ். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் திரைக்கதையினை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.