தமிழ் சினிமா

தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்: பின்​னணிப் பாடகி எஸ்​.ஜானகி மறைவு

48 ஆயிரம் பாடல்​களைப் பாடி சாதனை படைத்​தவர்

செய்திப்பிரிவு

மைசூரு: வயது முதிர்ச்​சி​யின் காரண​மாக பிரபல பின்​னணிப் பாடகி எஸ்​.ஜானகி மைசூரு​வில் நேற்று கால​மா​னார். அவருக்கு வயது 88.

ஆந்​திர பிரதேச மாநிலம் (அப்​போதைய மெட்​ராஸ் மாகாணம்) குண்​டூர் மாவட்​டம் ரெபால்லி அரு​கிலுள்ள பல்​லப்​பட்டா கிராமத்​தில் 1938-ம் ஆண்டு பிறந்​தார் ஜானகி. தனது 19-வது வயதிலேயே திரைத்​துறைக்கு வந்​து​விட்​டார்.

1956-ல் அகில இந்​திய வானொலி நடத்​திய பாட்​டுப்​போட்​டி​யில் வெற்றி பெற்ற அப்​போதைய குடியரசுத் தலை​வர் ராஜேந்​திர பிர​சாத்​திடம் பரிசு வாங்​கி​னார். 1957-ல் தமிழில் விதி​யின் விளை​யாட்டு படத்​தின் மூலம் அறி​முக​மாகி ஆயிரக்​கணக்​கான பாடல்​களைப் பாடி​யுள்​ளார். ஏவி.எம். ஸ்டூடியோ​வில் ஒப்​பந்த அடிப்​படை​யில் பாடகி​யாக அறி​முக​மா​னார்.

திரைத்​துறை​யில் சுமார் 60 ஆண்டு கால​மாக கோலோச்​சிய அவர் 48 ஆயிரத்​துக்​கும் அதி​க​மான பாடல்​களைப் பாடி சாதனை படைத்​துள்​ளார். தெலுங்​கு, தமிழ், கன்​னடம், மலை​யாளம், இந்​தி, சம்​ஸ்​கிருதம், ஒடி​யா, துளு, உருது, பஞ்​சாபி, படுகர், பெங்​காலி, கொங்​க​னி, ஆங்​கிலம், ஜப்​பான், ஜெர்​மன், சிங்கள மொழி உட்பட 20 மொழிகளில் பாடி சாதனை படைத்​தவர்.

கே.​வி.ம​காதேவன், கண்​ட​சாலா, எம்​.எஸ்​.​விஸ்​வ​நாதன் - ராமமூர்த்​தி, ஜிகே வெங்​கடேஷ், இளை​ய​ராஜா, சங்​கர்​-கணேஷ், சந்​திர​போஸ், தேவா, ஏ.ஆர்​.ரஹ்​மான் உட்பட பெரும்​பாலான இசையமைப்​பாளர்​களின் இசை​யில் பாடி​யுள்​ளார்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்​திப் பாடல்​களைத் தாமே எழுதி இசையமைத்​துப் பாடி​யுள்ள இவர் மவுனப் போராட்​டம் என்ற தெலுங்​குப் படத்​துக்கு இசையமைத்​திருக்​கிறார். 5 வயது குழந்​தை​யாக​வும், 60 வயது பாட்​டி​யாக​வும் அரு​மை​யாகப் பாடி குரலில் ஜாலங்​கள் நிகழ்த்​தி​ய​வர் எஸ்​.ஜானகி.

4 தேசிய விருதுகள்:

பின்​னணி பாடியதற்​காக இது​வரை அவர் 4 தேசிய விருதுகளைப் பெற்​றுள்​ளார். 1977-ல் 16 வயதினிலே படத்​தில் செந்​தூரப் பூவே பாடலுக்​காக​வும், 1981-ல் ஒப்​போல் மலை​யாளப் படத்​துக்​காக எட்​டுமனூரம்​பலத்​தில் பாடலுக்​காக​வும், 1984-ல் சிதாரா தெலுங்​குப் படத்​துக்​காக வெண்​ணல்லோ கோதாரி அந்​தம் பாடலுக்​காக​வும், 1992-ல் தேவர் மகன் படத்​துக்​காக இஞ்சி இடுப்​பழகா பாடலுக்​காக​வும் தேசிய விருதுகளைப் பெற்​றுள்​ளார்.

கடந்த சில மாதங்​களாக வயது முதிர்ச்​சி​யின் காரண​மாக அவர் கர்​நாடக மாநிலம் மைசூரு​வில் உள்ள தனது வீட்​டில் தங்கி ஓய்​வெடுத்து வந்​தார். இந்​நிலை​யில் நேற்று மாலை அவருக்கு திடீரென உடல்​நலக்​குறைவு ஏற்​பட்​டது. இதையடுத்து அவர் மைசூரு​விலுள்ள அப்​பல்லோ மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார்.

அவரது இறு​திச் சடங்கு குறித்த தகவல் வெளி​யாக​வில்​லை. அவரது உடல் மைசூரு​வில் உள்ள அவரது இல்​லத்​தில் ரசிகர்​களின் அஞ்​சலிக்​காக வைக்​கப்​பட்​டுள்​ளது. அவரது மறைவுக்கு தமிழ், தெலுங்​கு, மலை​யாளம், கன்​னடத் திரை​யுல​கினர் இரங்​கல் தெரி​வித்து வரு​கின்​றனர்.

கணவர், மகன் மறைவு: அவரது கணவர் வி.​ராம்​பிர​சாத் 1997-ம் ஆண்டு கால​மா​னார். அவரது ஒரே மகனான முரளி கிருஷ்ணா கடந்த ஜனவரி​யில் திடீர் உடல்​நலக்​குறைவு காரண​மாக கால​மா​னார். அதனால் மனமுடைந்​திருந்த ஜானகி, மகன் பிரி​விலேயே மரணமடைந்​துள்​ள​தாக அவரது உறவினர்​கள் தெரி​வித்​தனர்.

SCROLL FOR NEXT