'லெஜெண்ட்' சரவணன் தயாரித்து நடித்த படம், ‘லெஜெண்ட்’. 2022-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை ஜேடி- ஜெர்ரி இயக்கி இருந்தனர்.
இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை துரை செந்தில்குமார் இயக்குகிறார். இவர், ‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’, ‘கொடி’, ‘பட்டாஸ்’, ‘கருடன்’ ஆகிய படங்களை இயக்கியவர். இதில் பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்கிறார். ஷாம், ஆண்ட்ரியா, பாகுபலி பிரபாகர், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர், ஜிப்ரான் இசையமைக்கிறார்.
எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக் ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ‘லீடர்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதன் டைட்டில் அறிமுக விழா சென்னையில் நேற்று நடந்தது.
“நிழல் உலகத்துக்கும் போலீஸுக்கும் இடையே நடக்கும் யுத்தத்தில் சாமானியன் சிக்கிக்கொள்கிறான். அதன் தீவிரத்தில் இருந்து அவன் தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் எப்படி காப்பாற்றி, தப்பிக்கிறான் என்பதுதான் லீடர். மாஸ், ஆக் ஷன், சஸ்பென்ஸ், த்ரில் என அனைத்து அம்சங்களும் இப்படத்தில் இருக்கின்றன” என்று படக்குழு தெரிவித்துள்ளது.