இடது: எஸ்.ஜானகி | வலது: இளையராஜா, எஸ்பிபி
சென்னை: பழம்பெரும் பின்னணிப்பாடகி எஸ்.ஜானகி மறைவுக்கு தமிழக முதல்வர் விஜய், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலாளர் வீரபாண்டியன் உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவு: இந்தியத் திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர். பலமுறை தேசிய திரைப்பட விருதுகள் உட்பட எண்ணற்ற உயரிய விருதுகளைப் பெற்ற அவர், தனது இனிமையான குரல், உணர்வுகளை வெளிப்படுத்தும் அபார திறன் மற்றும் இசைக்கான அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருப்பார்.
அவரது மறைவு இந்திய இசை உலகுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினர், இசைக் கலைஞர்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல்.முருகன்: பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, தனது இனிமையான குரலாலும், உணர்வுபூர்வமான இசை வெளிப்பாட்டாலும் பல தலைமுறை மக்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர்.
இந்திய இசை உலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நிலைத்திருக்கும். அன்னாரின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், இசை ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்: இசைக்குயில் எஸ். ஜானகி மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் முதல் அனிருத் வரை ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய கானகோகிலம் ஜானகியின் இசைப்பயணம் மிக நீண்டது.
அவரது மறைவு என்பது, வானொலி தொடங்கி ஸ்பாட்டிஃபை வரையில் அவரது அமுதகானங்களைத் தங்கள் இல்லங்களில் ஒலிக்கவிட்டு இரசிக்கும் தமிழக மக்கள் உள்ளிட்ட தென்னிந்திய மக்களுக்கும், இந்தியத் திரைத்துறைக்கும் பேரிழப்பாகும்.
இனிமையும் இளமையும் மாறாத தனது குரலால் காலத்தால் அழியாத பாடல்களைப் பாடிய அவர், என்றும் நம் இல்லங்களிலும் நெஞ்சங்களிலும் ஒலித்துக்கொண்டே இருப்பார். அவரது மறைவால் வாடும் திரைத்துறையைச் சேர்ந்த கலைஞர்கள், ரசிகர்கள், அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் மு.வீரபாண்டியன்: பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ். ஜானகி அம்மாள், வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால், மைசூருவில் உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த துயரத்தை தருகிறது. இனிமையான குரலுக்கு சொந்தக்காரர் அவர்.
தமிழ் மொழிப் பாடல்களை மிகச் சிறப்பாக, இனிமையாகப் பாடியவராவார். அவர் பாடிய பாடல்களின் மூலம் அவரது நினைவுகள் என்றென்றும் நிலைத்திருக்கும். அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: உலகப் புகழ்பெற்ற பின்னணிப் பாடகியும், இசையின் இனிமையை தனது குரலால் தலைமுறைகள் தாண்டி உயிர்ப்பித்து தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் (Nightingale) என அன்போடு அழைக்கப்படுபவருமான எஸ்.ஜானகி உடல்நலக்குறைவால் இயற்கை எய்தியதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
அவரை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரையுலகினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடிநிழலில் இளைப்பாற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், நடிகர்கள் ரஜினி, கமல் உள்பட திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.