தமிழ் சினிமா

கே.பி.ஜெகனின் ‘ஜெயில் மேட்ஸ்’ டைட்டில் டீசர் வெளியீடு

ப்ரியா

கே.பி.ஜெகன் இயக்கி, நடித்திருக்கும் ‘ஜெயில் மேட்ஸ்’ படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

‘ராமன் தேடிய சீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘புதிய கீதை’ படங்களை இயக்கியவர் கே.பி.ஜெகன். இவர் தற்போது ‘ஜெயில் மேட்ஸ்’ என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்தப் படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.

1.35 நிமிடங்கள் ஓடும் இந்த டீசர், இயக்குநர் கே.பி.ஜெகன் தூத்துக்குடி கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதில் தொடங்குகிறது. அவருடன் அடைக்கப்பட்டிருக்கும் சக சிறைவாசிகளுக்கு, அவர் ஒரு சினிமா இயக்குநர் என்பதும், பிரபல நடிகர் ஒருவரின் படத்தை இயக்கியவர் அவர் என்பதும் தெரிந்திருக்கிறது.

அந்த பிரபல நடிகரிடம் பேசி இயக்குநரை விடுதலை செய்ய பரிந்துரைக்கும்படி அவர்கள் ஜெகனை வற்புறுத்துகின்றனர். அதற்கு அந்த நடிகரின் தொடர்பு எண் தன்னிடம் இல்லை என்றும், படிப்புக்காக, மருத்துவ உதவிகளுக்காக அவர்களிடம் பேசலாம். இந்த மாதிரி விஷயங்களுக்காக எல்லாம் அவர்களிடம் பேசக்கூடாது என்கிறார் ஜெகன்.

இப்படி ஓர் அசாதாரணமான, சுவாரஸ்யமான கதைக் களத்தைப் பேசி கவனம் ஈர்க்கிறது இந்த டீசர். 

படத்தின் தயாரிப்பாளர்கள் இப்படத்தை தமிழின் முதல் ‘மெட்டா பிலிம்’ எனத் தெரிவித்துள்ளனர். ஒரு புனைவு அல்லது திரைப்படம் தன்னைத் தானே இது புனைவு என வெளிப்படுத்திக் கொள்ளவது போல உள்ள படங்களை மெட்டா பிலிம் என அழைக்கின்றனர்.

இந்தப் படத்தை கே.பி.ஜெகன் எழுதி இயக்கி உள்ளார். அவருடன் விஜய் வர்மா, சனாஷ்கா ஸ்ரீ, மோனிகா சந்தோஷ், அருள்தாஸ், வெற்றிவேல் ராஜா, கதிரவன் பாலு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எம்.எஸ்.பாஸ்கர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

யுனைட்டட் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன், பசங்க புரெடக்‌ஷன்ஸ், ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். சுகாசெல்வன் ஒளிப்பதிவும், மணிகண்டன் சிவகுமார் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். 

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT