சண்முக பாண்டியன் ஹீரோவாக நடிக்கும் ‘கொம்பு சீவி’ படத்தை பொன் ராம் இயக்கி இருக்கிறார். இதில் சரத்குமார் முக்கிய கேரக்டரிலும் புதுமுகம் தார்னிகா நாயகியாகவும் நடிக்கின்றனர்.
மேலும் சுஜித் ஷங்கர், கல்கி, முனீஷ்காந்த், காளி வெங்கட், ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஸ்டார் சினிமாஸ் முகேஷ் டி.செல்லையா தயாரித்துள்ள இப்படம் டிச.19-ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில் படம் பற்றி இயக்குநர் பொன்ராம் கூறும்போது, “1996-ம் காலகட்டத்தில், தேனி மாவட்டத்தில் நடந்த உண்மைச் சம்பவக் கதையை மையப்படுத்தி, சில மாற்றங்களுடன் இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். வைகை அணை கட்டும்போது 12 கிராமங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. மக்கள் இடம் பெயர்ந்தாலும் அம்மக்களின் வாழ்வாதாரம் அந்தப் பகுதியைச் சுற்றிதான் இருக்கும். அணையில் தண்ணீர் வற்றினால் அவர்கள் வைத்த கிணறு, வீடு ஆகியவை அடையாளங்களாகத் தெரியும்.
நான் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படப்பிடிப்புக்காக அந்தப் பகுதிக்குச் சென்றபோது அணைக்குள் ஒரு கிணறு இருந்தது. அதில் மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்து விவசாயம் செய்து கொண்டிருந்தார்கள். தண்ணீர் வந்து அணை நிரம்பினால், அதை விட்டுவிடுவார்கள். இதன் பின்னணியில் அமைக்கப்பட்ட கதைதான் இந்தப் படம்.
ஒரு விஷயத்தைத் தூண்டி விடுவதற்கு கொம்புசீவி விடுவது என்று கிராமங்களில் சொல்வது உண்டு. அதனடிப்படையில் வைக்கப்பட்ட தலைப்புதான் இது. இதில் சரத்குமார், சண்முக பாண்டியன் இருவருமே சிறப்பாக நடித்துள்ளனர். வழக்கமாக என் படங்களில் இருப்பது போல ஆக்ஷன், காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கி இருக்கிறோம். இதில் நாயகியாக நடித்துள்ள தார்னிகா, முன்னாள் ஹீரோயின் ராணியின் மகள். அவர் போலீஸாக நடித்துள்ளார்” என்றார்.