பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், மிஷ்கின் தன்னை தொட்டுப் பேசிய வீடியோ குறித்த இணையதள யூகங்களுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ், ‘விஷயங்களை சரியாக புரிந்துகொள்ளுங்கள்’ என கடுமையாக பதில் அளித்துள்ளார்.
மிஷ்கின் - கீர்த்தி சுரேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ படம் இன்று (நவ.20) வெளியாகி உள்ளது. இந்தப் படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷைப் பாராட்டி பேசும்போது, இயக்குநர் மிஷ்கின் அருகில் இருந்த கீர்த்தியை இயல்பாகத் தொட்டுப் பேசினார்.
இந்த வீடியோவை பகிர்ந்திருந்த சமூக வலைதள பயனர் ஒருவர், மிஷ்கினின் இந்தத் தொடுதல் நடிகைக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியதாக கருத்து தெரிவித்து, சாதாரண தொடுதலுக்கு ஏன் நடிகை அசவுகரியத்தை வெளிப்படுத்த வேண்டும் என கேள்வி எழுப்பி இருந்தார். இந்தப் பதிவு பின்னர் அழிக்கப்பட்டுவிட்டது.
அந்தப் பயனருக்கு கீர்த்தி சுரேஷ் மிகக் கடுமையாக பதில் அளித்துள்ளார். அவர் தனது பதிலில், “முதலாவதாக எனது முகத்தில் எங்கே நீங்கள் அசவுகரியத்தைப் பார்த்தீர்கள்? எனக்கும் அவருக்கும் தந்தை - மகள் போல ஒரு பந்தம் உள்ளது என நாங்கள் இருவரும் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா?
இரண்டாவதாக, நான் அசவுகரியத்தை உணர்ந்ததாக வைத்துக் கொண்டாலும், திரைப்படங்களில் எங்களைத் தொட்டு நடிப்பார்கள் என்பதற்காக, பொதுவெளியிலும் அப்படி நடக்கும்போது அதை இயல்பாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்களா? சில விஷயங்களை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவேண்டும் சகோதரரே’ எனத் தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ்.விஜய் இயக்கியுள்ள படம் ‘சத்தியவான் சாவித்திரி’. இப்படத்தில் மிஷ்கின், கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன், சாருகேஷ், பாலசரவணன், ஷில்பா மஞ்சுநாத், மதுசூதனன், ஆர்.சுந்தரராஜன், பிரிகிடா, மாலா பார்வதி மற்றும் ஏ.வெங்கடேஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜீ ஸ்டுடியோஸுடன் இணைந்து டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு, சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவையும், ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். இந்தப் படம் இன்று வெளியாகி உள்ளது.