கதிர் நடித்துள்ள ‘ஆசை’ திரைப்படம் மார்ச் 6-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷிவ் மோஹா இயக்கத்தில் கதிர், திவ்ய பாரதி, பூர்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆசை’. பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக இருந்தது. சரியான வெளியீட்டு தேதிக்காக படக்குழு காத்திருந்தது. தற்போது மார்ச் 6-ம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
2019-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் ’இஷ்க்’. அனுராஜ் மனோகர் இயக்கத்தில் ஷான் நிகம், அன் ஷீத்தல் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் அதிகாரபூர்வ தமிழ் ரீமேக் தான் ‘ஆசை’ என்பது குறிப்பிடத்தக்கது.
’ஆசை’ படத்துக்கு ஒளிப்பதிவாளராக பாபு குமார், இசையமைப்பாளராக ரேவா உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர். மார்ச் 6-ம் தேதி வெளியீடு என்பதால் விரைவில் விளம்பரப்படுத்தும் பணிகளை தொடங்கவுள்ளது படக்குழு.