தமிழ் சினிமா

“உண்மைக்கு மிக நெருக்கமானது...” - ‘டோரதி’ குறித்து கார்த்திக் சுப்பராஜ் விவரிப்பு

ப்ரியா

‘டோரதி’ படத்தை பார்வையாளர்களை நம்பி எடுத்திருப்பதாகவும், படத்தை திரையரங்கில் சென்று பார்த்து அனுபவிக்குமாறு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது குறித்து சினிமா ரசிகர்களுக்கு நீண்ட கடிதம் ஒன்றை தனது எக்ஸ் தள பக்கத்தில் கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘என் பிரியத்துக்குரிய பார்வையாளர்களுக்கு, இன்று ‘டோரதி’ நாள்; இது என்னுடைய பத்தாவது படம் என்றாலும் என் முதல் படமான ‘பீட்சா’ வெளியான முதல்நாளினைப் போல ஆர்வமாகவும் பதற்றமாகவும் உள்ளேன்.

இந்தப் படத்தை உருவாக்கிய நாட்கள் என்னை ஒரு இயக்குநரா, கலைஞனாக, மனிதனாக மிகவும் மாற்றியுள்ளது. எனது படங்களிலேயே உண்மைக்கு மிகவும்  நெருக்கமானதும், உணர்வுப்பூர்வமானதும் இந்தப் படம்தான். 90-களில் நடந்த பல உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்ட படம் இது.

இந்தக் கதையை சாமானிய மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என நான் நினைத்தபோது என்னிடம் பலர் கேட்ட கேள்வி ஒன்று தான். ‘எந்த நம்பிக்கையில் இந்தப் படத்தை எடுக்கிறாய்?’  அதற்கு என்னிடம் இருந்த, இப்போதும் இருக்கும் பதில் ‘பார்வையாளர்கள் மீது இருக்கும் நம்பிக்கை’!

இதோ அந்த நாளும் வந்துவிட்டது. ஒரு குழந்தை தான் வரைந்த முதல் ஓவியத்தை பெருமையுடன் தன் பெற்றோரிடம் காட்டுவது போல ‘டோரதி’ படக்குழுவினராகிய நாங்கள் எங்கள் படைப்பை உங்கள் முன் வைக்கிறோம்.

இப்போது இருந்து ‘டோரதி’ உங்களுடையவள். அவளுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்; நிச்சயம் அவள் உங்கள் மனதினைத் தொடுவாள்.

இந்தப் படத்தை திரையரங்கில் சென்று பாருங்கள். நிச்சயம் அது உங்கள் நேரத்தை வீணடிக்காது என்று நான் உறுதியளிக்கிறேன்.

படத்தைப் பார்ப்பதற்கு முன்பாக அது குறித்த விஷயங்களை வாசிப்பதையோ கேட்பதையோ தவிர்த்திடுங்கள் என நான் உங்களை வேண்டிக்கொள்கிறேன். இது நேரில் அனுபவிக்க வேண்டிய ஓர் உணர்வு.

அதேபோல் நீங்களும் படத்தின் முக்கியமான திருப்பங்களையோ, காட்சிகளையோ இணையத்தில் பகிரவோ பதிவிடவோ வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன். அப்போது தான் நீங்கள் அனுபவித்த உணர்வை மற்றவர்களும் உணர முடியும்’ என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இளையராஜா இசையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான படம் ‘டோரதி’. கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை கார்த்திக் சுப்பராஜ் அவரின் தம்மம் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். டொரான்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்ற இந்தப் படம் இன்று (செப்.25) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

SCROLL FOR NEXT