தமிழ் சினிமா

“சினிமா என்பது ஆயுதங்களை விட வலிமையான கலை வடிவம்” - கார்த்திக் சுப்புராஜ்

ஸ்டார்க்கர்

ஆயுதங்களை விட வலிமையான கலை வடிவம்தான் சினிமா என்பதை உணர்ந்து இருக்கிறேன் என்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பேசினார்.

ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நீளிரா’. ஏப்ரல் 3-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில் நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக செல்வரத்னம் பிரதீபன், இசையமைப்பாளராக கே ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர்.

          

இந்தச் சந்திப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், “முதலில் திரைப்படங்களை இயக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவாக இருந்தது. அதன் பிறகு திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என்பதற்காக ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தை தொடங்கினோம். எப்படிப்பட்ட படங்களை தயாரிக்க வேண்டும் என்று நான் விரும்பினேனோ அப்படிப்பட்ட படங்களை தயாரிக்க முன்வந்தோம்.

பொதுவாக ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கும் எல்லா படத்திற்கும் கார்த்திக் சுப்பராஜ் வழங்கும் என்று தான் இருக்கும். படத்தின் தயாரிப்பாளராக கார்த்திகேயன் சந்தானம் இருப்பார். ஆனால் முதன் முறையாக நானாக இப்படத்தின் தயாரிப்பாளர் பெயரில் என் பெயரும் இடம்பெற வேண்டும் என்று விரும்பி கேட்டேன். அப்படி ஆசைப்பட்ட திரைப்படம் இது.

இந்த படத்துக்கு முன் இயக்குநர் சோமீ மிகப் பெரிய டாக்குமெண்ட்ரி இயக்குநர். இலங்கையில் போர் நடக்கும்போது போரை பற்றிய ஆவணப் படத்தை இயக்கியவர்.‌ அவர் ஒரு ஊடகவியலாளரும் கூட. அவருடைய கதையை அவரே எழுதி இருக்கிறார். அவரிடம் இன்னும் நிறைய ஏராளமான கதைகள் உள்ளன.

எனக்கு ஈழம் சம்பந்தமாக ஓர் உணர்வுபூர்வமான தொடர்பு உண்டு. கார்த்திகேயன் சொன்னது போல் 'காட்சி பிழை' தான் என்னுடைய முதல் குறும்படம். அதன் மூலமாகத்தான் நான் நாளைய இயக்குநரில் தேர்வானேன்.

சோமீ குறிப்பிட்டதைப் போல் பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்து அந்த மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டேன். ஈழ மக்கள் மீது எனக்கு ஒரு எம்பதி இருந்தது. அதை கலை வழியாக கொண்டு வர வேண்டும் என்றும் விரும்பினேன்.

சினிமா ஆயுதங்களை விட வலிமையான கலை வடிவம் என்பதை உணர்ந்து இருக்கிறேன்.‌ உங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதுதான் கலை படைப்புகள். வசூல் என்பதையெல்லாம் கடந்து இந்தச் சமூகத்திற்கு சில உண்மை கதைகளை அவசியம் சொல்ல வேண்டும். நாம் எல்லா பார்த்திடாத கேட்டிராத கதைகளை சொல்ல வேண்டும் என்பதுதான் சினிமா.

ரசிகர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதுதான் சினிமா. அத்தகைய தருணத்தில் நான் சோமீயை சந்தித்தேன். அவருடைய எல்லா ஆவணப் படங்களையும் பார்த்தேன். அவரை சந்தித்து நிறைய கதைகளை சொல்லும்போது இந்த ‘நீளிரா’ கதையையும் சொன்னார்.

ஒரு திருமணம் - அதற்காக இரவில் நடைபெறும் சடங்குகள் - சம்பிரதாயங்கள் என்று சொன்னார். அதைக் கேட்கும் போது மிகவும் எமோஷனலாக இருந்தது. அதே தருணத்தில் அது ஒரு திரில்லராகவும் இருந்தது. இதனை ஒரு சர்வைவல் திரில்லர் என்றும் சொல்லலாம். போரை பற்றிய எந்த சிந்தனையும் இல்லை என்றாலும் இந்தப் படம் பார்க்கும்போது இது ஒரு அசலான த்ரில்லர் திரைப்படம் என்ற அனுபவத்தை வழங்கும்.

தற்போது ஈரானில் போர் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் தமிழகத்தில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதனால் இங்கு ஒரு திருமணம் நிற்கிறது. அதனால் உலகத்தில் எங்கோ நடைபெறும் ஒரு போரின் தாக்கத்தை நம்மால் உணர முடிகிறது. இந்தச் சூழலில் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு பகுதியில் திருமணம் எப்படி நடந்திருக்கும் என்பதை எம்மால் எளிதாக புரிந்து கொள்ள இயலும். அதுவும் இந்த திரைப்படம் சுவாரசியங்களுடன் எதிர்பாராத திருப்பங்களுடன் சொல்லப்பட்ட ஒரு கதையாக உருவாகி இருக்கிறது” என்று பேசினார் கார்த்திக் சுப்பராஜ்.

SCROLL FOR NEXT