தமிழ் சினிமா

‘கர’ விமர்சனம்: தனுஷ் + விக்னேஷ் ராஜா கூட்டணி சாதித்ததா, சறுக்கியதா?

டெக்ஸ்டர்

கடந்த 2023ஆம் ஆண்டு வெளியாகி கவனம் ஈர்த்த படம் ‘போர் தொழில்’. தமிழில் வெளியான தரமான சைக்கோ த்ரில்லர் படங்களில் ஒன்றான அப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா, ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷை வைத்து இயக்கியிருக்கும் படம் ‘கர’.

1991ஆம் ஆண்டு ஒரு நள்ளிரவில், திருடன் கரசாமி (தனுஷ்) ஒரு மரத்தின் மீது அமர்ந்து பூட்டியிருக்கும் ஒரு வீட்டை நோட்டம் விடுகிறார். சரியான நேரம் வந்ததும், தனது உதவியாளருடன் (பிரித்வி பாண்டியராஜன்) உள்ளே நுழைகிறார். ஒரு மிகச் சிறந்த தொடக்க காட்சியுடன் ஆரம்பிக்கும் படம், அடுத்து டிஎஸ்பி பரதனை (சுராஜ் வெஞ்சரமூடு) அறிமுகம் செய்கிறது.

அவரிடம் இருந்து தப்பிக்கும் கர, தனது மனைவி செல்வியுடன் (மமிதா பைஜு) ஆந்திராவுக்கு சென்று அங்கு திருந்தி வாழ விரும்புகிறார். சொந்தமாக தொழில் செய்ய நினைக்கும் அவருக்கு கடன் வழங்க வங்கி முன்வராததால் தன் சொந்த ஊரில் இருக்கும் நிலத்தை நாடுகிறார். இதன் பிறகு நடக்கும் சில அசாம்பாவிதங்களால் அவர் தனது பழைய பாதைக்கு திரும்பும் சூழல் உருவாகிறது. பிறகு என்னவானது என்பதே ‘கர’ படத்தின் மீதிக் கதை.

ஒரு திரைப்படத்தின் முதல் சில நிமிடங்கள் எவ்வளவு முக்கியமானது என்பதை இயக்குநர் விக்னேஷ் ராஜா நன்கு உணர்ந்துள்ளார். படத்தின் முதல் 15 நிமிடங்களை அவர் கையாண்ட விதத்தை வெகுவாக பாராட்டலாம். அந்தக் காட்சியின் படமாக்கம், ஒளி, ஒலி அமைப்பு ஆகியவை நம்மை இருக்கை நுனியில் அமர வைக்கின்றன. ஒரு ஹெய்ஸ்ட் படத்திற்குத் தேவையான அட்டகாசமான தொடக்கம் இது. தேவையற்ற மசாலா அம்சங்கள் ஏதுமின்றி, படம் தொடங்கிய சில நொடிகளிலேயே நாயகனை அறிமுகப்படுத்தியது என மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி விடுகிறது.

தனுஷின் நடிப்புக்கு மற்றொரு தீனி இந்த கரசாமி கதாபாத்திரம். தனது முதிர்ச்சியான நடிப்பால் முழு படத்தையும் தாங்கிப் பிடிக்கிறார். ஒரு கோபக்கார, அதேசமயம் பலவீனங்கள் நிறைந்த கதாபாத்திரத்துக்கு தனது நேர்த்தியான நடிப்பால் நியாயம் செய்திருக்கிறார்.

படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் அதன் கதாபாத்திரத் தேர்வுகள். வங்கியின் மேலாளராக வரும் ஜெயராம் தொடங்கி, கரசாமியை துரத்தும் டிஎஸ்பியாக வரும் சுராஜ், குறைந்த நேரமே வந்தாலும் அழுத்தமான நடிப்பை வழங்கி இருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் வரை அத்தனை கதாபாத்திரங்களும் பார்த்து பார்த்து தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன. மமிதா பைஜு, கருணாஸ் உள்ளிட்டோருக்கு பெரிய ஸ்கோப் இல்லை.

படம் தொடங்கிய முதல் 10 நிமிடங்களில், ஒரு திருடனுக்கும் துடிப்பான போலீஸுக்கும் இடையிலான விறுவிறுப்பான பூனை - எலி ஆட்டத்துக்கான நம்பிக்கையை இயக்குநர் பார்வையாளர்களுக்கு தருகிறார். ஆனால், அடுத்த இரண்டரை மணி நேரத்துக்கு நமக்குக் கிடைப்பதோ, தான் என்ன சொல்ல வருகிறோம் என்பதில் தெளிவில்லாத திரைக்கதை மட்டுமே.

படத்தின் தொடக்கத்தில் உருவான அந்த எதிர்பார்ப்பு, அடுத்தடுத்த காட்சிகளிலேயே ஏமாற்றத்தை தருகிறது. குறிப்பாக கதைக்களத்தை விட சென்டிமென்ட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது ஒரு நல்ல வாய்ப்பைத் தவறவிட்டதாகவே தோன்றுகிறது. கே.எஸ்.ரவிக்குமார் வரும் காட்சிகள் எமோஷனலுக்கு வித்திட்டாலும் பல இடங்களில் ஓவர் டோஸ் ஆகி விடுகிறது.

தனுஷின் முந்தைய படங்களைப் போன்றே இதிலும் சென்டிமென்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க நினைத்திருப்பார்கள் போலும். படத்தின் முதல் பாதி முழுவதும் அப்பாவைப் பற்றிய காட்சிகளுக்கே செலவிடப்பட்டுள்ளது. இதை ஒரு சில காட்சிகளில் முடித்திருக்கலாம்.

எனினும் இடைவேளை காட்சி உருவாக்கப்பட்ட விதம் அட்டகாசம். அரங்கம் அதிர்வதற்கான அத்தனை ‘ஹை மொமெண்ட்களும்’ கொண்ட ஒரு காட்சி அது. அது முடியும்போது ஆடியன்ஸுக்கு ஏற்படும் திருப்தி, முதல் பாதியின் குறைகளை ஓரளவு மறக்கச் செய்து விடுகிறது.

எனினும் முதல் பாதி போல இரண்டாம் பாதியும் ஒரு தவறவிடப்பட்ட வாய்ப்பாகவே மாறுகிறது. பல காட்சிகளை நம்மால் முன்கூட்டியே கணித்துவிடமுடியும் அளவுக்கு பலவீனமான திரைக்கதை. இதனால் படத்தின் இருக்கும் சில சுவாரஸ்யமான காட்சிகள் கூட எடுபடாமல் போகின்றன.

வங்கியினுள் இருக்கும்போது எதிர்பாராமல் போலீஸ் வரும் காட்சியும், அதிலிருந்து தனுஷும் கருணாஸும் தப்பிக்கும் விதமும் மிக நேர்த்தியாகவும் விறுவிறுப்பாகவும் படமாக்கப்பட்டுள்ளன. இது போன்ற காட்சிகளில் கூடுதல் செலுத்தாமல் முழுக்க முழுக்க சென்டிமென்ட் பக்கம் சாய்ந்ததே மிகப்பெரிய பலவீனமாக தோன்றுகிறது.

முதல் பாதியில் திருடும் காட்சிகளில் இருந்த சுவாரஸ்யம் கூட இரண்டாம் பாதியில் கமர்ஷியலாக மாறியதை ஏற்க இயலவில்லை. ஒரு ஹெய்ஸ்ட் படத்துக்கு உண்டான விறுவிறுப்பு படத்தில் மிஸ்ஸிங்.

முதலில் இந்த படத்தை 90களில் நடப்பது போல காட்சிப்படுத்தியிருப்பதற்கு தொழில்நுட்ப வசதிகள் இல்லை என்ற ஒரே லாஜிக்கை தாண்டி வேறு காரணங்கள் இருப்பதாக தெரியவில்லை.

ஜி.வி. பிரகாஷின் இசையில் 'கண்ணம்மா' பாடல் இனிமை. பின்னணி இசை சுமார் ரகம். முந்தைய தனுஷ் - ஜி.வி படங்களில் இருந்த ஈர்க்கும் இசை இதில் இல்லை.

வங்கி கடன் மோசடி, வளைகுடா போர், எரிபொருள் தட்டுப்பாடு என இப்போது நடக்கும் பல விஷயங்களை பேசியிருந்தாலும், அவை திரைக்கதையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

மொத்தத்தில் படத்தின் முதல் 15 நிமிடங்கள் மற்றும் இடைவேளை காட்சிகளில் செலுத்திய உழைப்பையும் நேர்த்தியையும் மொத்த படத்துக்கும் செலுத்தி இருந்தால் ஒரு தரமாக ஹெய்ஸ்ட் த்ரில்லர் தமிழுக்கு கிடைத்திருக்கும். ஆனால் திணிக்கப்பட்ட சென்டிமென்ட், இழுவையான முதல் பாதி, இலக்கில்லாத இரண்டாம் பாதி என ஒரு சராசரியான அனுபவமாக வந்திருக்கிறது இந்த ‘கர’.

SCROLL FOR NEXT