நடிகரும், தவெக தலைவருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்று கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் மறு ஆய்வுக்காக தணிக்கை வாரியத்திடம் நிலுவையில் உள்ளது.
இப்படம் இணையத்தில் கசிந்தது தொடர்பாக கேவிஎன் புரொடக் ஷன்ஸ் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், சென்னை சைபர் க்ரைம் போலீஸார் சிலரை கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் போலீஸாரால் தேடப்பட்ட திருவேற்காட்டைச் சேர்ந்த உமாசங்கர் என்பவர், முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக நடந்தது. உமாசங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ், மனுதாரர் ஜவுளிக்கடை நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அவருக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை, என வாதிட்டார்.
இதற்கு படத்தயாரிப்புக்குழு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் மற்றும் சைபர் க்ரைம் போலீஸார் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன் ஆகியோர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். அவர்கள் வாதிடுகையில், “மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஜனநாயகன் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட்டதில் உமாசங்கருக்குத்தான் முக்கிய பங்கு உள்ளது.
உதவி எடிட்டராக பணியாற்றிய நபரும், அவரது சகோதரரும் ஜனநாயகன் படத்தை திருடி வந்து மனுதாரரிடம் அளித்துள்ளனர். அவர்தான் அதை இணையத்தில் பதிவேற்றம் செய்து பகிர்ந்துள்ளார். இதற்கு பின்னணியில் வேறு யார், யார் உள்ளனர் என்பதை, உமாசங்கரை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே உண்மை வெளியே வரும்.
எனவே முன்ஜாமீன் அளிக்கக்கூடாது” என வாதிட்டனர். இதையடுத்து நீதிபதி, மனுதாரர் மீதான குற்றச்சாட்டு தீவிரமானது எனக்கூறி, முன்ஜாமீன் கோரிய உமாசங்கரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.