விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் என ஆரம்பம் முதலே தகவல் வெளியாகி வந்தது. எனினும் படக்குழு அதுகுறித்து எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. மலேசியாவில் நடைபெற்ற ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ஹெச்.வினோத் அதுகுறித்து நேரடியாக பதிலளிக்காமல் மறைமுகமாக பேசிவிட்டுச் சென்றார்.
இந்த நிலையில் இன்று வெளியான ‘ஜனநாயகன்’ ட்ரெய்லரின் ஒவ்வொரு காட்சியையும் பதிவிட்டு இப்படம் ‘பகவந்த் கேசரி’யின் ரீமேக்தான் என்பதை நெட்டிசன்கள் டீகோட் செய்து உறுதிப்படுத்தி வருகின்றனர். ட்ரெய்லரில் வரும் சண்டைக் காட்சிகள், மமிதா பைஜுவுக்கு விஜய் பயிற்சி கொடுப்பது என பல காட்சிகள் பகவந்த் கேசரியை அப்படியே ஒத்திருப்பதாக கூறி வருகின்றனர்.
எனினும் அசலில் இல்லாத பல்வேறு அரசியல் வசனங்கள், ட்ரெய்லரின் இறுதியில் வரும் ரோபோட் உடனான சண்டை உள்ளிட்ட அம்சங்கள் கவனம் ஈர்த்துள்ளன. ஏற்கெனவே இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தை தமிழுக்கு ஏற்றவாறு கமர்ஷியல் அம்சங்களுடன் ரீமேக் செய்திருந்தார் ஹெச்.வினோத். அதே போல இந்த படத்தையும் தெலுங்கில் இருந்த லாஜிக் மீறல் காட்சிகளை அப்படியே கொடுக்காமல் மாற்றி இருப்பார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
விஜய் உடன் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கவுதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ளது ‘ஜனநாயகன்’. கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குநராக அனல் அரசு பணியாற்றி உள்ளார். இந்தப் படம் வரும் 9-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.