கோப்புப் படம்
சென்னை: நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்று வழங்கும்படி தனிநீதிபதி உத்தரவுக்கு எதிராக, சென்சார் போர்டு தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுக்கப்படும் என தலைமை நீதிபதி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்று வழங்கக் கோரி, பட தயாரிப்பு நிறுவனமான, கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, படத்துக்கு யு/ ஏ சான்று வழங்க முடிவு செய்த பின், படத்தை ஆய்வு செய்த குழு உறுப்பினர், புகார் அளித்துள்ளது பிந்தைய சிந்தனை. இதுபோன்ற புகாரை ஏற்றுக் கொண்டால் அது அபாயகரமானதாகி விடும்.
ஏற்கெனவே படத்தை பார்த்து, தணிக்கை குழுவினர் தெரிவித்த மாற்றங்களை செய்த பின், படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி, படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப சென்சார் போர்டு தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், படத்துக்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்க, சென்சார் போர்டுக்கு உத்தரவிட்டார்.
தனிநீதிபதி பிறப்பித்த இந்த தீர்ப்புக்கு எதிராக, சென்சார் போர்டு தரப்பில், தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா தலைமையிலான அமர்வில், மத்திய அரசின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ ஆர் எல் சுந்தரேசன் முறையீடு செய்தார்.
முறையீட்டை கேட்ட தலைமை நீதிபதி, மனுவாக தாக்கல் செய்தால் எப்போது விசாரிக்கலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். இதையடுத்து, மேல்முறையீட்டு மனுவை தயார் செய்து தாக்கல் செய்யும் பணியை தீவிரமாக மத்திய தணிக்கை வாரியம் மேற்கொண்டு வருகிறது.