‘ஜமா’ இயக்குநர் பாரி இளவழகனின் அடுத்த பட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
‘ஜமா’ படத்தினை இயக்கி, நாயகனாக நடித்தவர் பாரி இளவழகன். இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து மில்லியன் டாலர் நிறுவனம் தயாரிக்கும் படத்தினை இயக்கி, நாயகனாக நடித்து வந்தார் பாரி இளவழகன்.
இதன் படப்பிடிப்பு ஒரே கட்டமாக முடிக்கப்பட்டுள்ளது. மில்லியன் டாலர் நிறுவனம் தயாரிக்கும் 7-வது படமாக இது அமைந்துள்ளது. இன்னும் இப்படத்துக்கு பெயரிடப்படவில்லை. இப்படத்துக்கு கதை மற்றும் திரைக்கதை எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ளார் பாரி இளவழகன்.
இதில் நாயகியாக ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, தமிழ் சினிமாவுக்கு மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார் ரோஜா. அவருடன் இணைந்து சேத்தன், ‘பரிதாபங்கள்’ கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இதற்கு ஒளிப்பதிவாளராக ஷெல்லி கேலிஸ்ட், இசையமைப்பாளராக பரத் சங்கர் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர். சென்னையின் பெரம்பூர் பகுதியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இக்கதை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் காமெடியாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடித்துள்ளது படக்குழு. மேலும், இப்படத்தினை கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.