ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தின் ‘அலே போலெலோ’ சிங்கிள் ப்ரமோவின் மலையாள உச்சரிப்பு கேரள ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கும் ரஜினியின் ‘ஜெயிலர் 2’ முதல் சிங்கிள் பாடலான ‘அலே போலெலோ’ தலைப்பை ப்ரொமோ வீடியோவாக படக்குழு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அனிருத் இசையமைத்து பாடி இருக்கும் இந்தப் ப்ரமோ ரசிகர்களிடையே உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
32 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில், செண்டை மேளத்தின் தாளத்தில், ‘ஆஆஆ.. கப்பம்பல போலே...’ என அனிருத்தின் குரல் ஒலிக்கத் தொடங்குகிறது.
தொடரும் துள்ளல் இசை நம்மை பாடலுக்குள் இழுக்க, திரையில் பச்சை உடை நடன கலைஞர்களின் பின்னணியில், நடிகை பூர்ணா கேரளத்துக்கே உண்டான வெள்ளை சேலையில் இசைக்கேற்ப ஆடுகிறார்.
ப்ரமோவின் உருவாக்கம் பாராட்டு பெற்றிருக்கும் நிலையில், பாடல் வரிகளின் மலையாள உச்சரிப்பு விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.
பல ரசிகர்கள் இது மலையாள உச்சரிப்புதானா என கேள்வி எழுப்பு உள்ளனர். இன்னும் சிலர் பாடலின் மலையாள உச்சரிப்பு சரியாக இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இன்னும் சில ரசிகர்கள், பிற மொழி பாடல்கள் மற்றும் வசனங்களை பயன்படுத்தும் போது தமிழ்சினிமா இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், ஒரு பிரிவினர் சரியான உச்சரிப்பினை உறுதி செய்ய மலையாளம் பேசும் பாடலாசிரியர்கள், பாடகர்களை உடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘ஜெயிலர் 2’. இதில் ரஜினியுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மேக்னா ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். மோகன்லால், சிவ ராஜ்குமார் கவுரவ வேடத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார்.