தமிழ் சினிமா

‘ஜெயிலர் 2’ விமர்சனம்: மீண்டும் கர்ஜித்தாரா ‘டைகர்’ முத்துவேல் பாண்டியன்?

சல்மான்

கடந்த 2023-ஆம் ஆண்டு நெல்சன் திலீப்குமார் - ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘ஜெயிலர்’ படத்தின் தொடர்ச்சியாக, வெளியாகி இருக்கிறது ‘ஜெயிலர் 2’. சிலை கடத்தலை மையமாக கொண்டு அதில் ரஜினி ஃபார்முலாவை கலந்து உருவாக்கப்பட்ட முதல் பாகத்தின் வெற்றியை இந்த படமும் தக்கவைத்ததா என்று பார்ப்போம். சிறிய ஸ்பாய்லர்கள் இடம்பெற்றுள்ளது என்பதை படம் பார்க்காத வாசகர்கள் கவனத்தில் கொள்க.

முந்தைய பாகத்தின் இறுதியில் தனது மகனின் இறப்புக்குப் பிறகு ஒரு மலைக் கிராமத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் சூப்பர்வைசராக அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் முத்துவேல் பாண்டியன் (ரஜினிகாந்து). அங்கு இருக்கும் நகராட்சி அதிகாரியுடன் ஏற்படும் ஒரு சின்ன மோதல், அவரை பழக்கடை நடத்தும் மூர்த்தி என்பவரிடம் டிரைவாக கொண்டு சேர்க்கிறது.

இன்னொரு பக்கம், முதல் பாகத்தில் கொல்லப்பட்ட வர்மனின் மரணத்துக்கு பழிவாங்க அவரது கூட்டாளி திலீப்பும் (சுராஜ்), அவர்களுக்கு மேலிருக்கும் மாஃபியா கும்பல் தலைவர் போதி கல்பக்கும் (எஸ்.ஜே.சூர்யா) வெறியோடு அலைகின்றனர்.

வர்மனைக் கொன்றது யார் என்று தேடி வரும் இந்த கும்பலின் பார்வை, இறுதியில் முத்துவேல் பாண்டியன் மீது விழுகிறது. தான் ஒதுங்கி வாழ நினைத்த வன்முறை உலகத்துக்குள் மீண்டும் இழுக்கப்படும் முத்துவேல் பாண்டியன், இந்தச் சிலை கடத்தல் கும்பலை ஒட்டுமொத்தமாக எப்படி முடித்துக்கட்டுகிறார் என்பதே மீதிக்கதை.

முதல் பாகம் வெளியானபோது கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், ரஜினிக்கான மாஸ், ஓரளவு சுவாரஸ்யமான திரைக்கதை, தியேட்டர் தருணங்கள், சர்ப்ரைஸ் கேமியோக்கள் என கலந்து கட்டி ஒரு கம்ப்ளீட் பேக்கேஜாக கொடுத்து கல்லா கட்டிருந்தார் நெல்சன். தற்போது இந்த இரண்டாம் பாகத்திலும் அதே பாணியை கடைபிடித்து முதல் பாகத்தை விட சுவாரஸ்யமான ஒரு படத்தை கொடுத்து ஜெயித்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

கடந்த பத்தாண்டுகளில் குறிப்பாக ‘கபாலி’ படத்துக்குப் பிறகு ரஜினிக்கான மாஸ் இலக்கணம் முற்றிலும் மாறிவிட்டது. அதை மிகச் சரியாகப் புரிந்துகொண்ட நெல்சன், தன் வழக்கமான டார்க் நகைச்சுவையையும், ரஜினியின் அதிரடி மாஸ் பிம்பத்தையும் கச்சிதமாக இணைத்துள்ளார்.

படத்தின் முதல் பாதி முழுக்கவே நெல்சனின் டிரேட்மார்க் நகைச்சுவையோடு நகர்கிறது. யோகி பாபு, ’நாடோடிகள்’ நமோ நாராயணா தொடர்பான காமெடிகள் நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.

இன்னொரு பக்கம் சுராஜ் வெஞ்சரமூடு - ரஜினி இடையிலான ஆடு புலி ஆட்டத்தை வைத்து இரண்டாம் பாதிக்கான மோதலை மிக நிதானமாக உருவாக்கி இருக்கிறார்.

பாலத்தில் நடக்கும் ஸ்னைப்பர் காட்சி, இடைவேளைக்கு முன்னால் சுராஜின் இடத்தில் நடக்கும் சண்டை என தியேட்டர் தெறிக்கும் தருணங்கள் படம் முழுக்கவே தாராளமாக வைக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் பாதியில் கதை கோவாவுக்கு நகரும்போது காமெடி குறைந்து ஆக்‌ஷன் காட்சிகள் உக்கிரமடைகின்றன. கூடவே ஒரு முக்கியமான தருணத்தில் வரும் எமோஷனல் காட்சி படமாக்கப்பட்ட விதமும் அதில் ரஜினி, மிர்ணா, ரம்யா கிருஷ்ணன், சிறுவன் ஆத்விக் உடைய நடிப்பும் வெகு சிறப்பு. முதல் பாகத்தில் இறுதியில் நடக்கும் சம்பவத்தை கொண்டு அந்த எமோஷனல் கோணத்தை நெல்சன் மிக அழகாகக் கையாண்டுள்ளார்.

75 வயதிலும் தனது கம்பீரமான ஸ்டைல், அதே நேரம் யோகி பாபு, நமோ நாராயணா உடன் சேர்ந்து காமெடி என  திரையை முழுமையாக ஆக்கிரமிக்கிறார் ரஜினிகாந்த். அதிகம் பேசாமல், கடைக்கண் பார்வை மூலமாகவே அரங்கை அதிர வைக்கும் மேஜிக் ரஜினியை தவிர யாரால் முடியும்?

“50 வருஷமா, யார் யாரோ என்னை முடிக்க ட்ரை பண்ணாங்க, ஆனா யாராலும் முடியல” என்று க்ளைமாக்ஸில் ரஜினி பேசும் பன்ச் வசனத்துக்கு அப்ளாஸ் தெறிக்கிறது.

மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு  காமெடி கலந்த வில்லத்தனத்தில் அசத்துகிறார். வழக்கம்போல தனது வித்தியாசமான மேனரிசத்தால் எஸ்.ஜே.சூர்யா கவனம் ஈர்க்கிறார். 

நடிகை வித்யா பாலனுக்கு வலுவான கதாபாத்திரம். நடிப்பதற்கு பெரிய வாய்ப்பில்லை என்றாலும் ஸ்டைலாக சிகரெட் ஊதிக் கொண்டே ரஜினியை மிரட்டும் காட்சியில் ஈர்க்கிறார்.

முந்தைய பாகத்தைப் போலவே கதைக்கு தொடர்பு இருக்கிறதோ இல்லையோ ஏராளமான கேமியோக்கள். இன்னும் சொல்லப் போனால் இதில் கூடுதலாக இரண்டு டிக்கெட்டுகளை இறக்கி இருக்கிறார்கள். 

அனிருத் மீண்டும் ஒருமுறை படத்தின் உயிர்நாடியாக செயல்பட்டிருக்கிறார். பாடல்கள் முந்தைய படத்தைப் போல பெரிதும் ஈர்க்கவில்லை என்றாலும், ‘ஒன் சன் ஒன் மூன்’ மற்றும் ‘ஹுக்கும்’ பின்னணி இசையின் மூலம் ரஜினியின் மாஸ் காட்சிகளை பக்காவாக எலவேட் செய்து அசத்துகிறார். பூர்ணா வரும் பாடலில் நடனம் ரசிக்க வைத்தாலும், நோரா ஃபதேஹி வரும் பாடல் படத்தின் ஓட்டத்துக்குத் தேவையில்லாத தடையை ஏற்படுத்துகிறது.

படத்தில் குறைகளும் இல்லாமல் இல்லை. படத்தில் லாஜிக் என்பது துளியளவு... இல்லை, இல்லை... துளியில் ஒரு கால் பங்கு அளவு கூட கிடையாது. அதிலும் இரண்டாம் பாதியை எல்லாம் மூளையை கழட்டி வைத்தால் மட்டுமே ரசிக்க முடியும் என்கிற நிலை.

ரஜினி தன் பங்குக்கு ஒரு 500 பேர், எஸ்.ஜே.சூர்யா தன் பங்குக்கு ஒரு 500 பேர் என கொன்று குவிக்கிறார்கள். ஆனால் போலீஸ் என்ற ஓர் இனம் இருப்பதற்கான அறிகுறியே படத்தில் இல்லை. ஆங்காங்கே சும்மா உப்புக்கு சப்பானி போல வந்து செல்கிறார்கள். அதிலும் கேமியோவாக வரும் ஹ்ரித்திக் ரோஷன் எல்லாம் போலீஸ் ஸ்டேஷனுக்கு காரை கொண்டு வந்து உடைத்து இன்னொரு பக்கமாக வெளியேறிச் செல்கிறார். 

இடைவேளையின்போது இரண்டாம் பாதியே சுராஜை வைத்துதான் நகரப் போகிறது என்று எதிர்பார்க்க வைத்து, இரண்டாம் பாதி தொடங்கும்போதே அவரது கேரக்டரை முடித்து வைப்பது ஏமாற்றத்தை தருகிறது.

முத்துவேல் பாண்டியனுக்கு தோல்வியே கிடையாதா? ஹீரோவுக்கு ஏதேனும் பெரிய சிக்கல் வந்து அதை அவர் கஷ்டப்பட்டு தீர்ப்பதுதானே திரைக்கதையை இன்னும் சுவாரஸ்யமாக்கும்? ஆனால், ஏதேனும் ஒரு சிக்கல் வந்தாலும் அதை அடுத்த நிமிடமே தன்னுடைய பராக்கிரமத்தால் முறியடித்து விடுகிறார். அப்படி எத்தனை பேருக்கு தான் அவர் ஜெயிலராக இருந்தபோது உதவி செய்திருக்கிறார் என்று தெரியவில்லை. முந்தைய பாகத்தை விட இதில் லிஸ்ட் இன்னும் பெரிதாகி இருக்கிறது. 

இதுபோன்ற லாஜிக் ஓட்டைகள் அநேகம் இருந்தாலும் ரஜினி என்ற மாயாஜாலத்தின் முன் அவை மறக்கப்படிப்படுகின்றன. வயது முதிர்வின் காரணமாக ரஜினி முந்தைய காலங்களைப் போல அதிரடியாக சண்டை போடவோ, நடனமாடவோ முடியாது என்பதை உணர்ந்து, அவரது பலத்தை புரிந்து வைத்து நெல்சன் ஒரு பொழுதுபோக்கு மசாலா விருந்தை படைத்துள்ளார்.

மூன்றாம் பாகத்துக்கான குறியீட்டுடன் படம் முடிகிறது. சில சுணக்கங்கள் இருந்தாலும், தியேட்டரில் கொண்டாட்டத்துக்கான எந்தக் குறையும் வைக்காத ஒரு பக்காவான இரண்டாம் பாகமாக வந்துள்ளது இந்த ‘ஜெயிலர் 2’.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT