திருமாவளவன்

 
தமிழ் சினிமா

வன்முறைகள் இல்லாமல் படம் எடுக்கவே முடியாதா? – திருமாவளவன் கேள்வி

ஸ்டார்க்கர்

வன்முறைகள் இல்லாமல் படம் எடுக்கவே முடியாதா என்று ‘நெல்லை பாய்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பேசினார்.

ஒயிட் ஸ்க்ரீன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நெல்லை பாய்ஸ்’. கமல்ஜி இயக்கியுள்ள இப்படத்தில் அறிவழகன், ஹேமா ராஜ்குமார், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல் திருமாவளவன் கலந்துக் கொண்டார்.

இந்த விழாவில் தொல்.திருமாவளவன் பேசும் போது, “சிறு முதலீட்டுப் படங்கள் பல நெருக்கடிகளைச் சந்திக்கின்றன. அவர்களால் பெரிய அளவிலே பிரம்மாண்டமான விளம்பரங்களைச் செய்ய முடிவதில்லை. வெளியீட்டாளர்களும் - விநியோகஸ்தர்களும் அந்த அளவுக்குப் போட்டி போட்டுக்கொண்டு வாங்க வருவதில்லை. அந்த வரிசையில் இந்தப் படமும் ஒன்றோ, அறிவழகன் நடித்த படம் திரைக்கு வராமல் போய்விடுமோ என்று கவலை இருந்தது. 'நெல்லை பாய்ஸ்' திரைப்படத்தின் கதை எனக்குத் தெரியாது. முழுமையாக நான் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை, தெரியவில்லை.

ஆனால் அந்தப் படத்தலைப்பின் எழுத்தைப் பார்த்ததும் நான் கேட்டேன், என்ன இந்த நெல்லையில் நிறைய அரிவாள்கள் இருக்கின்றன, கொடுவாள்கள் இருக்கின்றன. இந்த எழுத்தின் வடிவமைப்பிலேயே அரிவாள் இருக்கிறதே என்று கேட்டேன். நெல்லை என்றாலே அரிவாள் என்று சித்தரிக்கவேண்டும் என்று இல்லை. திரைப்படங்களில் எனக்கு நெடுநாளாக உள்ள ஒரு பெரிய கேள்வி. வன்முறைகள் இல்லாமல் படம் எடுக்கவே முடியாதா? என்ற கேள்வி. வன்முறைகளுக்கு முன்னுரிமை அல்லது முக்கியத்துவம் தராமல் திரைப்படங்களை எடுக்க முடியாதா என்ற கேள்வி.

திரைப்படங்களில் காட்டுவதைப் போல் உள்ள படியே மக்களிடம் வன்முறை கலாசாரம் இருக்கிறதா என்ற கேள்வி. இயக்குநர்கள் மாற்றிச் சிந்திக்கவேண்டும். ஒரு கதாநாயகன் என்றால் அவன் பத்து பேரை ஒரே நேரத்தில் அடித்து துரத்துவான். பெரிய அளவில் தாதாயிசம் அல்லது ரவுடியிசம் இருந்தால்தான் அவன் ஹீரோ என்று கட்டாயமாக வலிந்து அதைக் காட்டித்தான் ஆகவேண்டுமா என்ற கேள்வி எனக்கு உண்டு.

நெல்லையில் எவ்வளவோ பேர் கல்விமான்கள், தொழிலதிபர்கள், ஆய்வாளர்கள் இருந்திருக்கிறார்கள். நீதிபதிகள் தோன்றி இருக்கிறார்கள். இன்னும் பல்வேறு சிறப்புக்குரியவர்கள் இருக்கிறார்கள். தென்மாவட்டம் என்றாலே அரிவாள் கலாசாரம், நெல்லை என்றாலே அரிவாள் கலாசாரம் என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிற போக்கு தொடர்ந்து இருக்கிறதே என்ற கவலை எனக்கு உண்டு. இந்தப் படத்தை வைத்து நான் பேசுவதாகக் கருத வேண்டாம். பொதுவாகப் பேசுகிறேன். அதை நாம் நியாயப்படுத்துகிறோம்.

திருமாவளவன்

திரைப்படங்களில் காட்டுகிற வன்முறை காட்சிகளைத்தான் தினந்தோறும் பார்க்கிறோம். அதன் மூலம் ஓர் உளவியல் கட்டமைக்கப்படுகிறது இரண்டு பேரை வெட்டிவிட்டார்களாம், பத்து பேரை வெட்டி விட்டார்களாம் என்று கேள்விப்படுகிறோம். அதைப்பற்றி நமக்கு பிரச்சினையே இருக்காது; கவலையே இருக்காது; பதற்றமே இருக்காது; படபடப்பு இருக்காது; பதைப்பு இருக்காது .அப்புறம் இப்படி நிகழ்ந்து கொண்டேதானே இருக்கும்?

சிறு முதலீடு என்றால் அது சிறு படம் என்று நாம் சொல்கிறோம். எந்தப் படமும் சிறிய படம், பெரிய படம் என்று இல்லை. முதலீடு தான் சிறிய முதலீடு, பெரிய முதலீடு. சிறு முதலீட்டுப் படங்கள் என்று வேண்டுமானால் நாம் சொல்லலாம். சிறு படங்கள் என்று சொல்லக்கூடாது. தயாரிப்பாளர்கள் நலிவடைந்து விடக்கூடாது; நட்டமடையக் கூடாது. அவர்களும் இங்கே பாதுகாப்பாகத் தொடர்ந்து இயங்க வேண்டும்.

படத்தை உருவாக்கும் இயக்குநர்கள் ஒரு முற்போக்கான பார்வை கொண்டு இருக்க வேண்டும்.

சாதி அமைப்பை நியாயப்படுத்துவது , சாதிப் பெருமையை உயர்த்திப் பிடிப்பது மதவாத அரசியலை நியாயப்படுத்துவது இவை எல்லாம் சமூகத்தின் நலன்களுக்கு உகந்தவையா என்ற சிந்தனை தேவை. பெரியார் அதற்காகத் தன் வாழ்க்கையை முழுமையாக ஒப்டைத்துக்கொண்டார் . 65 வயதிலே தன் வாழ்வையை முடித்துக்கொண்டார் அம்பேத்கர் அல்லும் பகலும் படித்துப் படித்து, எழுதி எழுதி உறக்கமில்லாமல் அந்த வாழ்வை முடித்துக்கொண்டார் .

அவர்களெல்லாம் இந்தச் சமூகத்தில் எத்தகைய மாற்றத்தை உருவாக்க விரும்பினார்களோ அந்த மாற்றத்தை உருவாக்குவதற்கு நாம் பெரிதாக திரைப்படத்தில் பிரச்சாரம் செய்ய முடியாது. ஆனால் அதற்கு எதிரான காட்சிகளை அமைத்து ஓர் எதிரான போக்கைச் சமூகத்தில் வளர்த்து விடாமல் இருந்தாலே போதும். இது என்னுடைய பணிவான வேண்டுகோள். இவர்கள் இளம் இயக்குநர், இளம் தயாரிப்பாளர் .இவர்களுக்கு எதிர்காலம் இருக்கிறது” என்று பேசினார் திருமாவளவன்.

SCROLL FOR NEXT