தமிழ் சினிமா

நடிகர் கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படத்தை வெளியிட இடைக்காலத் தடை!

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள ‘வா வாத்தியார் திரைப்படத்தை ஸ்டுடியோ கிரின் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தை வரும் டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற சொத்தாட்சியர் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவர் திவாலானவர் என கடந்த 2014 ம் ஆண்டு அறிவித்து அவருடைய சொத்துக்களை நிர்வகிக்க சொத்தாட்சியரையும் நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜூன்லால் சுந்தர்தாஸிடம் இருந்து ஸ்டூடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனம் 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தனர். அந்த தொகை வட்டியுடன் சேர்த்து தற்போது 21 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உள்ளது.

அந்த தொகையை செலுத்த ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தயாரித்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படம் வெளியிட இடைக்கால தடை விதிக்கவும், படம் மூலம் கிடைக்கும் வருவாயை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரியும் சொத்தாட்சியர் மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்எம் சுப்பிரமணியம், சி.குமரப்பன் அமர்வு, ‘வா வாத்தியார்’ திரைப்படத்தை 5-ம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை டிசம்பர் 8-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

SCROLL FOR NEXT